யாழ் விடுதியில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமி : வெளிவரும் அதிர்ச்சித் தகவல்கள்!!

3199

யாழ்ப்பாணத்தில்..

யாழ்ப்பாணத்தில் தனியார் விடுதி ஒன்றில் பெண் ஒருவரும் சிறுமியும் தங்கியிருந்த நிலையில், சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், பெண் சுயநினைவற்ற நிலையில் மீட்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்றையதினம் இடம்பெற்றிருந்தது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் உள்ள தனியார் தங்குமிட விடுதியில் கடந்த சில நாட்களாக, திருகோணமலையைச் சேர்ந்த பாட்டியும், அவரது பேத்தியான சிறுமியும், வாடகைக்கு அறை எடுத்து தங்கி இருந்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று செவ்வாய்க்கிழமை அறையில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து, விடுதி நிர்வாகத்தினர் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

இதை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் அறையை திறந்து பார்த்த போது, சிறுமியின் சடலம் உருக்குலைந்த நிலையில் காணப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் சிறுமி உயிரிழந்து 03 நாட்களுக்கு மேல் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அதேவேளை, சிறுமியின் பாட்டி அருகில் இருந்த கட்டிலில் சுயநினைவற்ற நிலையில் காணப்பட்டதை அடுத்து அவரை மீட்டு சிகிச்சைக்காக யாழ்,போதனா வைத்தியசாலையில் பொலிஸார் அனுமதித்தனர்.

மேலும் சிறுமியின் உயிரிழப்புக்கான காரணம் வெளியாகாத நிலையில், சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை யாழ்ப்பாண பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

அவர்கள் தற்கொலை செய்வதாக எழுதப்பட்ட கடிதமொன்றும் அறைக்குள்ளிருந்து மீட்கப்பட்டதாக கூறப்படும் நிலையில் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,திருகோணமலை, கடற்கரையை சேர்ந்த நாகபூசணி சிவநாதன் (53) என்பவரே உயிராபத்தான நிலையில் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 9ஆம் திகதி முதல் அவர்கள் விடுதியில் தங்கியிருந்துள்ளனர். 12 வயதான சிறுமிக்கு மனநல பிரச்சினை உள்ளதாகவும், அதற்காக வைத்தியசாலையில் சிகிச்சை பெற வந்ததாகவும் குறிப்பிட்டே, அவர்கள் விடுதியில் அறையெடுத்துள்ளனர்.

மறுநாள் பெண் மாத்திரம் ஒருமுறை வெளியில் சென்று வந்த பின்னர் அவர்கள் அறையை விட்டு வெளியில் வரவில்லை.இதனையடுத்து நேற்றையதினம் (12) அறையிலிருந்து துர்நாற்றம் வீசியதையடுத்து, விடுதி ஊழியர்கள் அறையை தட்டியுள்ளனர்.

பதிலில்லை. இதையடுத்து, யன்னல் பகுதியை உடைத்து உள்ளே பார்த்தபோது, கட்டிலில் இருவரும் அசைவற்று படுத்திருந்த நிலையில் கடுமையான துர்நாற்றம் வீசியது.

இருவரும் உயிரிழந்து விட்டார்கள் என கருதிய விடுதி ஊழியர்கள் உடனடியாக கோப்பாய் பொலிசாருக்கு அறிவித்தனர்.விரந்து வந்த கோப்பாய் பொலிசார் அறை கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர்.

இதன்போது, சிறுமியின் உடல் இலேசாக அழுகியிருந்தது. அடுத்த கட்டிலில் படுத்திருந்த பெண்ணின் உடலில் இலேசான அசைவு தென்பட்டது.உடனடியாக அவசர நோயாளர் காவு வண்டி வரவழைக்கப்பட்டு, அதில் அவரை ஏற்றியபோது , “என்னை எங்கு கொண்டு செல்கிறீர்கள்?“ என அவர் வினவினார்.

அதன்பின்னர் எந்தப் பேச்சுமில்லை.இந்நிலையில் மூதாட்டி தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் பொலிஸ் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அந்த அறையில் ஒரு தற்கொலை குறிப்பும் காணப்பட்டது. இருவருக்கும் மனநோய் ஏற்பட்டுள்ளதால் தற்கொலை செய்வதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் சிறுமியின் பெயர் கேமா எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறுமியுடன் வந்தவர் தாயாரா, பாட்டியா என்பதில் குழப்பம் நிலவிய நிலையில் அவர் தாயாராக இருக்கலாம் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது. மேலும் குறித்த பெண் இரண்டு திருமணம் செய்தவர் என்றும், உறவுச்சிக்கல்களால் அவர் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது