தமிழகத்திலிருந்து அவுஸ்திரேலியா தப்பிச் செல்ல முயற்சித்த இலங்கை இளைஞர்கள் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை அகதிகளுக்கென சில கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. குறிப்பாக வெளிநாடு செல்ல விரும்பும் இலங்கை அகதிகள் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் மூலம் முறையான அனுமதி பெற்று செல்லவேண்டும் என விதிகள் உள்ளன.
இந்நிலையில் திருச்சி உட்பட பல்வேறு இடங்களில் உள்ள இலங்கை அகதிகள் இளைஞர்கள் 12 பேர் கள்ளத்தோணி மூலம் கடலூர் வழியாக அவுஸ்திரேலியா செல்வதாக திருச்சி க்யூ பிரிவு பொலிஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதன்படி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.
திருச்சி கே.கே.நகரில் ஒரு இலங்கை இளைஞர்களை ஏற்றி கொண்டு வேன் கடலூர் புறப்பட்டு செல்ல தயாரானது தெரிய வந்தது. இதை தொடர்ந்து க்யூ பிரிவு பொலிஸார் அங்கு சென்று வேனை மடக்கினர்.
தொடர்ந்து விசாரணை நடத்திய பொலிஸார் வேனில் இருந்த 5 பேரையும் கைது செய்தனர். கைதான 5 பேரும் திருச்சி மத்திய சிறையில் நேற்று அடைக்கப்பட்டனர்.
பாதுகாப்பு கருதி இன்று காலை திருச்சி மத்திய சிறையில் இருந்து சென்னை புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு 5 பேரும் அங்கு அடைக்கப்பட்டனர். மேலும் 7 பேர் குறித்து க்யூ பிரிவு பொலிஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.