
இந்நாட்டின் நீதி அமைச்சர் என்ற வகையில் அளுத்கம, பேருவல பிரதேசத்தில் இடம்பெற்ற சம்பவம் குறித்து வெட்கப்படுவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
தனது மக்களின் குறைந்த பட்ச பாதுகாப்பை கூட உறுதிப்படுத்த, மக்களை காப்பாற்ற முடியாமையை இட்டு கவலையடைவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
பல்கலைக்கழக மாணவர்களுக்கு, தொழிற்சங்க தலைவர்களுக்கு எதிர்ப்பை வெளிப்படுத்தி ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்ள முடியாத வகையில் நீதிமன்ற உத்தரவை பெறும் பொலிஸார், பொதுபல சேனா மற்றும் சிகல ராவய அமைப்புக்களது ஆர்ப்பாட்டங்களுக்கு எதிரான தடை உத்தரவை பெற்றுக் கொள்ளாமை பாரிய சந்தேகத்தை தோற்றுவிப்பதாக அவர் சுட்டிக் காட்டினார்.
இவ்வாறான நிலை குறித்து சர்வதேசத்திற்கு அறிவிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக குறிப்பிட்டார். இதற்கு மேலும் அரசாங்கத்தில் இருப்பது குறித்து இன்று (16.06) மாலை இடம்பெறும் தமது கட்சி உறுப்பினர்களுக்கிடையிலான கூட்டத்தின்போது தீர்மானிக்கப்படும் எனவும் ஹக்கீம் தெரிவித்தார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை தோற்கடித்த அரசாங்கத்தால் இத்தகைய பயங்கரவாத அமைப்பை தோற்கடிக்காமை ஏன் என்ற கேள்வி தனக்கு எழுவதாக அமைச்சர் கூறினார்.
இந்நிலையில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர் என்ற ரீதியில் தான் வெட்கப்படுவதாக ரவூப் ஹக்கீம் மேலும் தெரிவித்தார்.
-அத தெரண-





