முக்கோணத் தொடரிலும் தொடருமா இந்திய அணியின் ஆதிக்கம்?

411

இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள், இலங்கை ஆகிய 3 நாடுகள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டி மேற்கிந்தியத்தீவுகளில் நேற்று முன்தினம் தொடங்கியது. தொடக்க ஆட்டத்தில் மேற்கிந்தியத்தீவுகள் 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது.

2-வது லீக் ஆட்டம் ஜமைக்காவில் உள்ள கிங்ஸ்டனில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதில் டோனி தலைமையிலான இந்தியா- பிராவோ தலைமையிலான மேற்கிந்தியத்தீவுகள் அணிகள் மோதுகின்றன. இங்கிலாந்தில் சமீபத்தில் நடந்த சம்பியன்ஸ் கிண்ணத்தை இந்திய அணி கைப்பற்றியது. இதனால் இந்தப்போட்டியில் நம்பிக்கையுடன் களம் இறங்குகிறது. இந்திய அணி வெற்றியுடன் தனது கணக்கை தொடங்குமா? என்று அனைவராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்கிந்தியத்தீவுகள் ஆடு களங்கள் மிதவேகம் மற்றும் சுழற்பந்து வீச்சுக்கு ஏற்ற வகையில் இருக்கும் என்று தெரிகிறது. இதனால் ரவிந்திர ஜடேஜா, அஸ்வின் ஆகியோர் முக்கிய பங்கு வகிக்கலாம். வேகப்பந்தில் புவனேஸ்வர்குமார், உமேஷ் யாதவ் சிறப்பாக வீசக்கூடியவர்கள். துடுப்பாட்டத்தில் தொடக்க வீரர் ஷிகார் தவான் மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. சம்பியன்ஸ் டிராபியில் அதிக ஓட்டங்களை குவித்து தொடர் நாயகன் விருதை பெற்றார்.

ரோகித்சர்மா, தினேஷ் கார்த்திக்,வீராட் கோலி, கேப்டன் டோனி ஆகியோரும் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர். மேற்கிந்தியத்தீவுகள் அணியை பொறுத்தவரை சொந்த மண்ணில் விளையாடுவது அந்த அணிக்கு கூடுதல் பலம். சம்பியன்ஸ் கிண்ணத்தில் இந்தியாவிடம் தோற்றதற்கு பதிலடி கொடுக்கும் ஆர்வத்தில் அந்த அணி உள்ளது. இலங்கையை தொடக்க ஆட்டத்தில் எளிதில் வீழ்த்தியதால் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளது.

கிறிஸ் கெய்ல், டாரன் பிராவோ,பொல்லார்ட், அணித்தலைவர்பிராவோ, டரன் சமி, சுனில் நரேன் போன்ற சிறந்த வீரர்கள் அந்த அணியில் உள்ளனர். இரு அணிகளுமே முழு திறமையை வெளிப்படுத்தும் என்பதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும்.