மூளை செயல்பாடுகளை விளக்கும் டிஜிட்டல் 3டி மாதிரி வடிவமைப்பு..!

448

brain

மனித மூளையின் செயல்பாடுகளை விளக்கும் வகையில் மூளையின், டிஜிட்டல் 3டி மாதிரியை, விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர்.

ஜெர்மனியை சேர்ந்த விஞ்ஞானிகள், கடந்த, 15 ஆண்டுகளாக மனித மூளையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். இதன் பயனாக, மனித மூளையின் வடிவம் மற்றும் செயல்பாடுகள் குறித்த, டிஜிட்டல் 3டி மாதிரியை வடிவமைத்துள்ளனர். 65வயது பெண்ணின் மூளையைக் கொண்டு, இந்த புதிய டிஜிட்டல் 3டி மாதிரி வடிவமைக்கப்பட்டுள்ளது.

மனித மூளையை, 7,400 சிறு துண்டுகளாக பிரித்து, அதன் மூலம் மூளையின் பல்வேறு நுணுக்கமான நரம்புகளின் செயல்பாடுகள் பற்றிய ஆய்வு இதில் விளக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், மயிரிழையில் பாதி அளவு தடிமன் கொண்ட நரம்புகளின் செயல்பாடுகளையும், எளிதில் அறிந்து கொள்ளும் வகையில், இந்த தொழில் நுட்பத்தில் அளித்துள்ள செயல் விளக்கம் சிறப்பாக அமைந்துள்ளது.

இதில், மனித மூளையில் உள்ள கோடிக்கணக்கான, நியூட்ரான்களின் செயல்பாடுகள் தத்ரூபமாக விளக்கப்பட்டுள்ளதால், மருத்துவத் துறையில் இது ஒரு புதிய சகாப்தம் படைக்கும்´ என,பல்வேறு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த டிஜிட்டல் 3டி மாதிரியை, உலகின் அனைத்து நாடுகளில் உள்ள டாக்டர்களுக்கு அனுப்பி வைக்கப் போவதாக, இதை வடிவமைத்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் மருத்துவத் துறையில் மூளை சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கு எளிதில் தீர்வு காண முடியும் என கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழக பேராசிரியர் பால் பிளேச்சர் தெரிவித்துள்ளார்.