பாடசாலை அதிபர்களுக்கு இராணுவ கேர்ணல் தர பயிற்சி தேவையா?

431

பாடசாலை அதிபர்களுக்கு இராணுவ பயிற்சி கொடுக்கும் திட்டத்தை அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று இலங்கை ஆசிரியர் சங்கம் கல்வியமைச்சின் செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் பயிற்சியில் ஈடுபட்டிருந்த பாடசாலை அதிபர் ஒருவர் நேற்று (30) காலை உயிரிழந்த நிலையிலேயே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 28ஆம் திகதி ரந்தம்பை என்னுமிடத்தில் ஆரம்பிக்கப்பட்ட இராணுவப் பயிற்சிநெறியில் உடற்பயிற்சிக்காக காலையில் 2 கிலோ மீட்டர் தூரம் நடக்க வேண்டும் என்ற நியதிக்கமைய,

நேற்று காலை நடைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த அதிபர் திடீர் சுகவீனமுற்று வைத்தியாசலைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது உயிரிழந்தார்.

உயிரிழந்த 52 வயதான டபிள்யு.ஏ.எஸ். விக்கிரமசிங்க, ரத்தெலுகம பஞ்ஞானந்த தேசிய பாடசாலையின் அதிபர்.

அதிபர் உயிரிழந்தமைக்கான பொறுப்பை அரசாங்கமே ஏற்கவேண்டும் என்று ஆசியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

பாடசாலை அதிபர்களுக்கும் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் இராணுவ பயிற்சி வழங்கும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த இலங்கை ஆசிரியர் சங்கம், இந்த சம்பவத்துடனாவது இந்தப் பயிற்சியை அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கோரியுள்ளது.

பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகின்ற மாணவர்களுக்கு தலைமைத்துவப் பயற்சி என்ற பெயரில், அரசு இராணுவ தர பயற்சி வழங்கிவருகிறது.

இதே மாதிரியான திட்டத்தின்கீழ், பாடசாலை அதிபர்களுக்கும் இராணுவ பயிற்சி வழங்கி கப்டன், லெப்டினன், லெப்டினன் கேர்ணல் என்ற தரத்திலான படிநிலைகளையும் அரசு வழங்கிவருவதாகவும் ஆசிரியர் சங்கம் விமர்சனங்களை முன்வைத்துள்ளது.

(BBC)