இங்கிலாந்தில் இருந்து பேசுகிறேன்.. மணப்பெண் தேடிய போது இளைஞருக்கு நேர்ந்த துயரம்!!

576

இங்கிலாந்தில்..

திருமணத்திற்காக மணப்பெண் தேடிய இளைஞரிடம், மணப்பெண் போல நடித்து ரூ.46 லட்சம் ஏமாற்றி மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மூலகுளத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (33).

இவர் சென்னையில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரின் திருமணத்திற்காக மணப்பெண் வேண்டி, அனைத்து விபரங்களையும் புதுச்சேரியில் உள்ள தனியார் திருமண தகவல் மையத்தில் கொடுத்து வைத்திருந்தார்.

இதன் பின், 2 மாதங்கள் கழித்து இங்கிலாந்தில் இருந்து போன் கால் மூலம் அழைப்பு வந்துள்ளது. அப்போது அதில் பேசிய பெண் ஒருவர், “நான் தமிழக மாவட்டம் கரூரை சேர்ந்தவர். நாங்கள் குடும்பத்துடன் இங்கிலாந்தில் வசித்து வருகிறோம். நான் இங்கு பிரபல நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறேன்.

எனக்கும் மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். உங்களது விபரங்கள் திருமண தகவல் மையத்திலிருந்து எனக்கு கிடைத்தது” என்று பேசினார். இதனை தொடர்ந்து இருவரும் வாட்ஸ் அப்பிலும் பேசி வந்துள்ளனர்.

பின்பு, தொடர்ந்து பேசிய அந்த பெண் பல்வேறு குடும்ப புகைப்படங்களை அனுப்பியுள்ளார். மேலும், “என்னுடைய மாமா இங்கு கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்து பெரிய நிறுவனத்தினை நடத்தி வருகிறார். அதில் நல்ல வருமானம் கிடைக்கும். உங்களுக்கு வேண்டுமானால் சொல்லுங்கள், கற்றுத்தருகிறேன்” எனக் கூறியுள்ளார்.

இதன் பிறகு, ராமகிருஷ்ணன் பெயரிலேயே பைனான்ஸ் மற்றும் பிட் மார்ட் ஆகிய நிறுவனங்களில் கணக்கு தொடங்கி முதலீடு செய்ய கூறியுள்ளனர். இதனால், கடந்த மாதத்தில் ரூ.46 லட்சத்தை பல்வேறு தவணைகளில் செலுத்தியுள்ளார்.

ஆனால், இவருடைய கணக்கில் உள்ள பணத்தை நேரடியாக வேறொரு கணக்கிற்கு மாற்றியுள்ளனர். இவருடைய கணக்கில் பணம் இல்லாததை உணர்ந்த ராமகிருஷ்ணன் ஏமாற்று விட்டோம் என்பதையறிந்து இணைய வழி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இது தொடர்பாக ஆய்வாளர்கள் கீர்த்தி மற்றும் கார்த்திகேயன் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.