மும்பையில்..
மும்பையில் 3 பேட்டரிகளை விழுங்கிய குழந்தை வயிற்றில் இருந்து மருத்துவர்கள் பத்திரமாக வெளியே எடுத்த நிகழ்வுக்கு மருத்துவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
பொதுவாக குழந்தைகள் பக்கத்தில் எந்த ஒரு சிறு பொருளும் வைக்க கூடாது என்பார்கள். குறிப்பாக உலோகம் சார்ந்த பொருட்கள் எதையும் வைக்கக்கூடாது என்று பெரியவர்கள், மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.
ஆனாலும் சில நேரங்களில் பெற்றோர்களின் அஜாக்கிரதை காரணமாக குழந்தைகளுக்கு பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகிறது. அந்த வகையில் தற்போது சிறு குழந்தை ஒன்று பேட்டரி விழுங்கிய நிலையில், அதனை எந்தவித சிக்கலும் இன்றி, மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் அமைந்துள்ள முலுண்ட் என்ற பகுதியில் அசோக் – ஸ்வேதா தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் ப்ரீஷா என்ற பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.
தற்போது குழந்தை பிறந்து 22 மாதங்கள் ஆகும் நிலையில், சிறுமி தனது பக்கத்து வீட்டு 7 வயது சிறுவனுடன் விளையாடி வந்துள்ளார். அந்த வகையில் கடந்த 8-ம் தேதியும் சிறுமி விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அந்த சமயத்தில் தாய் ஸ்வேதா சமையல் செய்துகொண்டிருந்துள்ளார்.
அப்போது சிறுமி தனது அருகில் இருந்த விளையாட்டு பொருட்களில் பட்டன் வடிவில் இருக்கும் பேட்டரிகளை விழுங்கியுள்ளார். பின்னர் சில மணி நேரம் கழித்து சிறுமி பச்சை நிறுத்தி வாந்தி எடுத்ததால் பதறிய பெற்றோர் உடனே மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கே சிறுமிக்கு X-RAY பரிசோதனையில் அவரது வயிற்றில் பட்டன் வடிவிலான 3 பேட்டரிகள் இருந்தது கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து சிறுமியின் வயிற்றில் இருந்து பேட்டரிகளை அகற்றும் பணி நடைபெற்றது.
அதன் ஒரு முயற்சியாக இயற்கை உபாதை மூலம் எடுக்க முயன்றனர். அப்போது 2 பேட்டரிகள் மட்டுமே வெளியே வந்ததால், மீதமுள்ள பேட்டரியை மருத்துவர்கள் எண்டோஸ்கோபி மூலம் அகற்றினர்.
அந்த பேட்டரிகளின் ரசாயனயங்களால் சிறுமிக்கு வயிற்றில் அல்சர் ஏற்பட்டுள்ளதாகவும், ஆனால் சரியான நேரத்தில் பேட்டரியை எடுத்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தற்போது சிறுமி நலமாக உள்ளார். இந்த நிகழ்வு அங்கு பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.