முன்னேஸ்வரம் பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் மிருகபலிக்கு தடை விதிக்க முடியாது : பிரதம நீதியரசர்!!

349

Muneswaran

இந்து ஆலயங்களில் செய்யப்படுகின்ற மிருக பலி யாகத்தை முழுமையாக தடை செய்ய முடியாது என்று இலங்கையின் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் அறிவித்துள்ளார்.

அதேவேளை, இப்படியான மிருகபலி யாகங்கள், நாட்டின் பொதுச் சட்ட விதி முறைகளுக்கு அமைய நடக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மிருக பலி தொடர்பாக பிக்குமாரின் தேசிய சங்க சம்மேளனம் தாக்கல் செய்த வழக்கு ஒன்றை விசாரித்த இலங்கை மேன்முறையீட்டு நீதிமன்றம், சிலாபத்தில் உள்ள முன்னேஸ்வரம் பத்திரகாளி அம்மன் ஆலய மிருகபலி பூசைக்கு அண்மையில் தடை விதித்திருந்தது.

அந்தத் தீர்ப்பை ரத்துச் செய்யுமாறு கோரி பத்திரகாளி அம்மன் ஆலயத்தினரால் தாக்கல் செய்யப்பட்ட மனுவொன்றை விசாரித்த போதே பிரதம நீதியரசர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மிருகங்களை கொல்வதற்கான அனுமதிப் பத்திரமொன்றை பெற்ற பின்னர், அப்படியான மிருக பலி யாகத்தை நடத்துவதற்கு அந்த ஆலயத்துக்கு எந்தவிதமான தடையும் கிடையாது என்றும் பிரதம நீதியரசர் கூறினார்.

ஆனால், அதனை ஏற்க மறுத்த காளி கோயில் நிர்வாகத்தின் சார்பிலான சட்டத்தரணி, சுமார் 100 வருடங்களுக்கும் அதிகமான காலமாக இந்த யாகத்தை நடாத்திவரும் ஆலயத்துக்கு அதனை தொடர்ந்து நடத்த இந்த அனுமதிப் பத்திரம் தேவையில்லை என்று வாதிட்டார்.

பொதுச் சட்டம் மீறப்படக் கூடாது என்று பதிலளித்த பிரதம நீதியரசர், சட்ட விதிமுறைகளை மீறாத வகையில், சம்பந்தப்பட்ட கோயில் நிர்வாகத்தினால், தன்னிச்சையாக உருவாக்கப்பட்ட ஒரு விதிமுறைக்கு அமைய, இந்த யாகத்தை நடத்த அனுமதி வழங்க முடியும் என்றும் கூறினார்.

அவ்வாறான ஒரு விதிமுறையை தயாரிப்பதற்கான உதவிகளை நீதிமன்றம் வழங்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். வழக்கு விசாரணை தொடரவுள்ளது.

அதேவேளை, மிருக வதையை தடுக்கும் சட்டம் ஒன்றை கொண்டு வருமாறு தாம் நாடாளுமன்றத்தை கோரப் போவதாக தேசிய சங்க சம்மேளனம் கூறியுள்ளது.

620-100 Final