கேரளாவில்..
கேரள மாநிலம் ஆலப்புழா அருகே உள்ள தலவடி பகுதியில் வசித்து வருபவர் சுனு. இவரது மனைவி சௌம்யா. இவர்கள் இருவரும் கூலித் தொழில் செய்து வந்தனர். இவர்களுக்கு 3 வயதில் ஆதி, ஆதில் என இரட்டைக் குழந்தைகள் இருந்த நிலையில், கூலித்தொழிலில் வரும் வருமானத்தில் செலவுகளை சமாளிக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தனர்.
இதனால் சுனு, சவும்யா தம்பதிக்கு கடன் தொல்லை அதிகமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை அவர்களது வீடு நீண்ட நேரமாகியும் திறக்கப்படவில்லை. குழந்தைகளின் சத்தமும் கேட்கவே இல்லை. இதனால் அக்கம்பக்கத்தினர் சந்தேகம் அடைந்தனர்.
அவர்கள் ஜன்னல் வழியே எட்டிப் பார்த்ததில் ஒரு அறையில் ஆதி, ஆதில் ஆகிய 2 பேரும் கட்டிலில் இறந்த நிலையில் கிடந்தனர். இன்னொரு அறையில் சுனுவும், சவும்யாவும் தூக்கு போட்டு உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர். இதை பார்த்து பக்கத்து வீட்டினர் அதிர்ச்சி அடைந்தனர்.
காவல்துறைக்கு தகவல் அளித்தனர். இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் 4 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆலப்புழா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இரட்டைக் குழந்தைகள் 2 பேருக்கும் விஷம் கொடுத்து கொலை செய்த பிறகு கணவன், மனைவி 2 பேரும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்களின் தற்கொலைக்கு கடன் தொல்லையா அல்லது வேறு ஏதாவது குடும்ப பிரச்சனையா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.