வவுனியாவில் மாணவி தாக்கப்பட்ட விவகாரம் : விசாரணைகள் இடம்பெறுகின்றது : வலயக்கல்வி அலுவலகம்!!

2949


வவுனியா தரணிக்குளம் பகுதியில் பாடசாலை மாணவி ஒருவரை ஆசிரியர் தாக்கிய சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றுவருவதுடன் ஆசிரியருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக வலயக்கல்வி அலுவலகம் தெரிவித்தது.வவுனியா தரணிக்குளம் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் கல்விபயிலும் மாணவி மீது அதே பாடசாலையினை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் அண்மையில் தாக்கியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து குறித்த விடயம் தொடர்பாக ஈச்சங்குளம் பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டிருந்ததுடன், இருதரப்பும் உடன்பட்டுக்கொண்டமையால் விடயம் சுமூகமாக்கப்பட்டிருந்தது.இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பாக வவுனியா வடக்கு வலயக்கல்வி அலுவலகத்திற்கும் தகவல் வழங்கப்பட்டிருந்தது. இதனையடுத்து உடனடி நடவடிக்கையினை எடுத்த வலயக்கல்வி அலுவலகம் குறித்த ஆசிரியருக்கு இடமாற்றத்தினை வழங்கியது.அத்துடன் சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணை ஒன்றை முன்னெடுக்கும் வண்ணம் குழு ஒன்றையும் நியமித்திருந்தது. இதேவேளை தற்போது அந்த ஆசிரியர் விடுமுறையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.


வலயக்கல்வி அலுவலகத்தால் விசாரணைகள் இடம்பெற்றுவந்த நிலையில் நேற்றயதினம் குறித்த மாணவி தனது வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து மாணவி உறவினர்களால் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மாணவி தொடர்பாக தவறான தகவல்கள் பரப்பப்பட்டதாக தெரிவித்தே அவர் தற்கொலை முயற்சியினை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பாக வைத்தியசாலை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்


சம்பவம் தொடர்பாக பூர்வாங்க விசாரணைகள் இடம்பெற்றுவருவதாக வவுனியா வடக்கு கல்விவலயத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.