நடுக்கடலில் தத்தளித்த படகுடனான தொடர்புகள் துண்டிப்பு : அகதி அமைப்பு கவலை!!

826

Aus

கிறிஸ்மஸ் தீவிற்கு அப்பால் தத்தளிப்பதாகக் கூறப்படும் அகதிப் படகுடனான தொடர்புகளை இழந்துள்ளதால், அதிலுள்ள தஞ்சக் கோரிக்கையாளர்களுக்கு என்ன நடத்திருக்கும் என்பதை அறிய முடியாமல் போயிருப்பதாக அகதி உரிமைகளுக்காக போராடும் அமைப்பொன்று அறிவித்துள்ளது.

153 பேருடன் இந்தியாவில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு தஞ்சம்கோரி புறப்பட்ட படகில் எண்ணெய்க் கசிவு ஏற்பட்டு நேற்று காலை கிறிஸ்மஸ் தீவில் இருந்து 175 கடல் மைல் தூரத்தில் நின்றதாக என்ற Refugee Action Coalition அமைப்பின் பேச்சாளர் தெரிவித்தார்.

இந்தக் கசிவின் காரணமாக அடுத்த சில மணித்தியாலங்களுக்கு எஞ்சின் வலுவை மாத்திரமே நம்பியிருக்க வேண்டும். எஞ்சின் செயலிழந்து படகு நகர முடியாத பட்சத்தில், அது கவிழக்கூடிய அபாயம் உள்ளதென பேச்சாளர் இயன் ரின்டோல் மேலும் தெரிவித்தார்.

நேற்று மாலை 1.45 அளவில் படகினுடனான செய்மதி தொலைபேசித் தொடர்புகள் துண்டிக்கப்பட்டதால், படகிற்கு அனர்த்தம் ஏற்பட்டதா என்பதை அறிய முடியவில்லையென அவர் குறிப்பிட்டார்.

இந்தப் படகு பற்றி அவுஸ்திரேலிய சமுத்திரவியல் பாதுகாப்பு அதிகாரசபைக்கு வெள்ளிக்கிழமை காலை அறிவிக்கப்பட்டதுடன், அவ்வமைப்பு படகை கண்காணித்து வருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

கிறிஸ்மஸ் தீவிற்கு அப்பால் படகொன்று உள்ளதா என்பதை ஊர்ஜிதப்படுத்த மறுக்கும் அமைச்சர் ஸ்கொட் மொரிசன், அவுஸ்திரேலிய அரசாங்கம் ஏதேனும் நடவடிக்கை எடுக்கிறதா என்பதையும் சொல்லவில்லை.

மெல்பேர்ணில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதலளித்த சமயம், இன்று உங்களுக்கு வழங்கக்கூடிய தகவல் எதுவும் கிடையாதென எனக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது, என்று அவர் குறிப்பிட்டார்.

பலர் உயிராபத்தை எதிர்கொள்ளும் சமயத்தில், மொரிசன் அசிரத்தையாகவும், அசட்டையாகவும் செயற்படுவது அதிருப்தியளிக்கிறதென ரின்டோல் தெரிவித்தார்.