வடக்கு இளைஞர் முன்னெடுப்பு அமைப்பினால் 2023ம் ஆண்டிற்கான இளைஞர் மாநாடு வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று (10.12.2023) இடம்பெற்றது.
வடக்கு இளைஞர் முன்னெடுப்பு அமைப்பினுடைய பணிப்பாளர் சுந்தரலிங்கம் காண்டீபன் ஒழுங்கமைப்பில் குறித்த நிகழ்வுகள் இடம்பெற்றது.
போர் முடிவடைந்து ஒரு தசாப்தம் நிறைவடைந்த நிலையில் அரசியல் தேவைகளுக்காக இனங்களுக்கிடையில் விரிசலை ஏற்படுத்தி முரண்பாட்டை ஊக்குவிப்பதற்கான பல சாதகமான தன்மைகள் சமூகத்தில் காணப்படுகிறது.
இவ்வாறான நிலையில் இலங்கை மக்கள் நிலையான சமாதானத்தை நோக்கிப் பயணிக்க வேண்டுமாயின் அநீதி மற்றும் நியாயமற்ற தன்மைக்கு உட்பட்டவர்களுக்கு உண்மையைக் கண்டறிய ஆவண செய்வதுடன் அவர்களது வாழ்க்கையை கட்டியெழுப்ப வேண்டிய அவசியம் தொடர்பாக குறித்த மாநாட்டில் விடயங்கள் முன்வைக்கப்பட்டது.
அத்துடன் பறிக்கப்பட்ட நீதி மற்றும் நியாயத்திற்காக ஒன்றாக குரல் கொடுக்கும் சகோதர பிணைப்பு மூலமாக உண்மை மற்றும் நீதியை கண்டறியும் பயணத்தின் முதற்கட்டமாக பல முன்மொழிவுகளும் முன்வைக்கப்பட்டது.
குறித்த முன்மொழிவுகள் அடங்கிய பிரதி நிகழ்வில் கலந்துகொண்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனுக்கு இளைஞர் அமைப்பால் வழங்கி வைக்கப்பட்டது.
மாநாட்டில் அரசியல் கட்சிகளினுடைய பிரதிநிதிகள், சிவில் அமைப்புக்களினுடைய பிரதிநிதிகள், மற்றும் இளைஞர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டதுடன் கருத்துக்களையும் முன்வைத்தனர்.