தீப்பிடித்து எரிந்த பயணிகள் விமானம் : 379 பேர் காப்பாற்றப்பட்டது எப்படி?

494

டோக்கியோவில்..

ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் இன்று (02-01-2024) டோக்கியோவில் ஹனேடா விமான நிலையத்தின் ஓடுதளத்தில் தரையிறங்கும்போது தீப்பிடித்து எரிந்துள்ளது. ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்கும்போது அங்கிருந்த கடற்படை விமானத்தில் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

மேலும் இந்த விபத்து இடம்பெறும்போதும் ஐப்பான் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணிகள் உட்பட 379 பேர் இருந்துள்ளனர். விமானத்திற்குள் இருந்த 367 பயணிகள் மற்றும் பணியாளர்கள் உள்பட 379 பேரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டதாக, ஜப்பானிய அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

379 பேருடன் வந்த ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்கும் போது ஜப்பான் கடலோர காவற்படை விமானத்தின் மீது மோதிவிட்டதாக ராய்ட்டர்ஸ் மற்றும் என்.எச்.கே. செய்தி நிறுவனங்கள் கூறியுள்ளன. மேலும், ஜப்பானில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நிவாரணப் பொருட்களை ஏற்றிக் கொண்டு அந்த கடலோர காவற்படை விமானம் நிகாட்டா விமான நிலையத்திற்கு செல்லவிருந்ததாக தெரியவந்துள்ளது.

2 விமானங்களும் எப்போது, எப்படி மோதிக் கொண்டன என்பது தொடர்பில்”விசாரிக்கப்பட்டு வருவதாக” கடலோர காவல்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில், ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் முழுவதும் எரிந்துவிட்டதாக தெரியவந்துள்ளது.

ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானத்தில் 379 பேரும், கடலோர காவல்படை விமானத்தில் 6 பேரும் இருந்தனர். அவர்களில் ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானத்தில் இருந்த 379 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டுவிட்டனர். கடலோர காவல்படை விமானத்தில் ஒருவர் மட்டும் பத்திரமாக வெளியே வந்துள்ளார். மேலும் 5 பேரின் நிலை என்னவென்று தெரியவில்லை.

இந்த விபத்தைத் தொடர்ந்து ஹனேடா விமானநிலையத்தில் அனைத்து ஓடுதளங்களும் மூடப்பட்டதாக, அதன் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார். மேலும், அந்த விமான நிலையத்திலிருந்து புறப்படும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானத்தின் உள்ளே இருந்த அனைத்துப் பயணிகளும் காற்று நிரப்பப்பட்ட சாய்தளம் மூலம் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

பிரித்தானியாவில் உள்ள கிரான்ஃபீல்ட் பல்கலைக்கழகத்தின் போக்குவரத்து அமைப்புகள் துறையின் இயக்குநர் பேராசிரியர் கிரஹாம் பிரைத்வைட், ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானத்தில் உள்ளே இருந்த பயணிகளை காப்பாற்றுவதில் விமான குழுவினரும் விமானிகளும் மேற்கொண்ட முயற்சிகளை பாராட்டியுள்ளார்.

“போக்குவரத்து பாதுகாப்பு என்று வரும்போது ஜப்பான் தனித்துவமான சாதனைகளை புரிந்துள்ளது,” என தெரிவித்த அவர், ஜப்பான் ஏர்லைன்ஸ் பயணிகளை பாதுகாப்பதில் “உலக தலைவர்” என பாராட்டினார். “பயணிகளை வெற்றிகரமாக வெளியேற்றியது, எந்தளவுக்கு விமான குழுவினருக்கு அது தொடர்பில் பயிற்சி அளித்துள்ளனர் என்பதை உணர்த்துகிறது” என்றார்.

மேலும், “அவர்களுடைய கவனம் முழுவதும் பயணிகளின் பாதுகாப்பு மீதுதான் இருந்துள்ளது” என்றார்.மேலும், “விமானத்திலிருந்து வெளியேறிய கடைசி நபர்கள் விமான குழுவினர் தான். அவர்கள் நம்பமுடியாத வேலையைச் செய்துள்ளனர்” என்றார்.