தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க தடைக்கு எதிரான வழக்கு தள்ளுபடி..!

437

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு இந்தியாவில் விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பை எதிரித்து மதிமுக பொதுச் செயாளர் வைகோ மற்றும் வழக்கறிஞர் புகழேந்தி ஆகியோர் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கடந்த 1991ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடை செய்யப்பட்ட இயக்கமாக மத்திய அரசு அறிவித்தது. அதன் பிறகு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை அந்த தடை நீட்டிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

கடந்த 2010ஆம் ஆண்டு மே மாதம் விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை மத்திய உள்துறை அமைச்சகம் நீட்டித்தது. இந்த தடை நீட்டிப்பு சரி தானா என்பது குறித்து ஆய்வு நடத்த டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் தீர்ப்பாயம் அமைக்கப்பட்டது.

அந்த தீர்ப்பாயம் டெல்லி, சென்னை, ஊட்டி உள்பட பல்வேறு இடங்களில் விசாரணை நடத்தி தடை நீட்டிப்பு சரி தான் என்று 2010ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை ரத்து செய்யக் கோரி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் வழக்கறிஞர் புகழேந்தி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை ஒரு ஆண்டுக்கு முன்பே முடிந்தாலும் தீர்ப்பு மட்டும் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி எலிபி தர்மாராவ் மற்றும் எம். வேணுகோபால் ஆகியோர் இன்று (01) வழங்கினர்.

அவர்கள் தங்கள் தீர்ப்பில் கூறியிருப்பதாவது,

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை நீட்டித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு சரி தான் என்ற தீர்ப்பாயத்தின் தீர்ப்பில் தவறு ஒன்றும் இல்லை.

அதனால் வைகோ மற்றும் வழக்கறிஞர் புகழேந்தி ஆகியோர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

(தட்ஸ் தமிழ்)