காதல்…… என்னவென்று கூற

597

மாதம் பன்னிரெண்டும்
எனை மதியாது கழிந்தோட,
ஈகைப் பண்புள்ள வெறுமையோ
நாளும் எனை வாட்ட,
நித்திரைப் பொழுதில்
நிசப்த்த நாளங்கள்,
ஒத்திகை நடத்துதே
என் விழியோர ஈரங்கள்..

நேசம் வீசி
நாடி வந்தேன்,
உன் சுவாசம் தேடி
ஓடி வந்தேன்,
என் பாதைகள் என்றும்
உன் பாதங்கள் தேட,
என் வீதிகள் முடியுமிடம்
என்றும் உன் வீடு தானே..

தனியொரு நாளில்
தவிப்புகள் நிறைய,
துணையிவள் வந்தால்
ஏக்கங்கள் கழிய,
விடையொன்று சொல்லிவிட்டு
வீடு செல்லு தளிரே,
நடைபிணம் நானுன்னை
நாளும் நாடுகிறேனே..

வீசும் காற்றுக்கு
விலைதான் என்னவோ,
வாடிய பயிராய்
வீதியில் நிற்கிறேன்,
எனை ஏசும் உன் விழிக்கு
என்னதான் கோபமோ,
அது சாடிய என்னுயிரும்
உடலிடத்தே பிரிந்தது..

எதுகை மோனையில்
போட்டி போட்டு,
ஏட்டுக் கவிதை வடிக்க
நான் வரவில்லை,
பதுமையிவள் பேசும்
மௌன மொழி கேட்டு,
மனப் பிதற்றலைத்
தீர்க்க வந்துள்ளேன்..

-பிரதீப்-