தமிழ் விவசாயிகள் மீதான தாக்குதலை கண்டித்து கிரான் சந்தியில் ஆர்ப்பாட்டம்..!

439

மட்டக்களப்பு வாகனேரி நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் வேளாண்மை செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மீதான தாக்குதலை கண்டித்து இன்று கிரான் சந்தியில் ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது.

இந்த ஆர்பாட்டப் பேரணியில் பெண்கள் உட்பட பெரும் எண்ணிக்கையிலானோர் கலந்து கொண்டனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

களுவாமடு எனுமிடத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இந்தத் தாக்குதல் சம்பத்தில் 5 விவசாயிகள் காயமடைந்தனர்.

சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைதான முஸ்லிம் விவசாயிகள் 5 பேர் நீதிமன்ற உத்தரவின் பேரில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மாதூறு ஒயா நீர்த்தேக்கத்திலிருந்து வாகனேரி குளத்திற்கு திறந்து விடப்பட்டுள்ள நீரை சிலர் அணை போட்டு திருப்பியுள்ள நிலையில், அந்த தடுப்பு அணைகளை அகற்றி விட்டு திரும்பும் போதே குறித்த விவசாயிகள் வழிமறித்து தாக்கப்பட்டுள்ளனர்.

இந்த சட்டவிரோத அணைகளை தங்களது அனுமதி பெற்றே விவசாயிகள் அகற்றியதாக நீர்ப்பானத் திணைக்களம் தெரிவிக்கிறது.

வாகனேரி நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் வேளாண்மை செய்கையில் ஈடுபட்டுள்ள தமிழ் விவசாயிகளினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்து கொண்டவர்கள், அந்தப் பகுதிகளில் தொடரும் சட்டவிரோத வேளாண்மைச் செய்கைகள் தடை செய்யப்படவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தும் வகையிலும் வாசக அட்டைகளை ஏந்தியிருந்தார்கள்.

விவசாயிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கூறினார்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான பொன். செல்வராசா, சீ.யோகேஸ்வரன், பா.அரியநேத்திரன் மற்றும் மாகாணசபை உறுப்பினர்களான இரா. துரைரெத்தினம், கி.துரைராஜசிங்கம் ஆகியோரும் இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்துகொண்டனர்.

(BBC)