வவுனியாவில் சாரதிகளின் கவனக்குறைவினால் அதிகரிக்கும் விபத்துக்கள் : வவுனியா வைத்தியசாலைப் பணிப்பாளர்!!

356

K.Akilendran

சாரதிகளின் கவனக்குறைவாலேயே அதிகளவான விபத்துக்கள் பதிவாகி வருகின்றது என வவுனியா பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கு.அகிலேந்திரன் தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த போது..

வவுனியா மாவட்டத்தில் அண்மைக்காலமாக விபத்துக்கள் அதிகரித்து வருகின்றமை எமது வைத்தியசாலை பதிவுகளின் மூலம் அவதானிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு ஏற்படும் விபத்துக்களில் அதிகமானவை சாரதிகளின் கவனக்குறைவாலேயே ஏற்படுகிறது. குறிப்பாக கடந்த 4ம் திகதி வெள்ளிக்கிழமை நொச்சிமோட்டையில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்தனர். அதிகமான வேகத்தில் வாகனம் செலத்தப்பட்டமையே இதற்கு காரணமென அறியப்படுகிறது.

இதேவேளை ஓமந்தை விளக்குவைத்தகுளம் பகுதியில் மிக மோசமான முறையில் தனியார் பேரூந்து தடம்புரண்டதில் ஒருவர் பலியானதுடன் 23 பேர் காயமடைந்துள்ளனர். இதற்கும் அதிவேகமாக வாகனம் செலுத்தப்பட்டமையே காரணமென அறியப்படுகின்றது.

இவை மட்டுமன்றி எமது வைத்தியசாலையின் விபத்துக்கள் பிரிவில் தினமும் பலர் அனுமதிக்கப்படுகின்றனர். இவர்களின் அதிகமானோர் மோட்டார் சைக்கிள் விபத்துக்களில் சிக்கியுள்ளனர்.

சாரதிகள் வாகனம் செலுத்தும்போது வீதி சமிக்ஞைகளில் கவனம் செலுத்தவேண்டும். போக்குவரத்து பொலிஸார் நிற்கும் இடங்களில் மாத்திரம் சீராக வாகனம் செலுத்துவது போன்ற பாசாங்கையும் ஏனைய இடங்களில் மோசமான முறையில் வாகனம் செலுத்துவதாலேயே இவ்வாறான விபத்துக்கள் ஏற்படுகின்றன.

விபத்துக்கள் தொடர்பில் சாரதிகள் தாமாக எண்ணி செயற்படாவிட்டால் வீண் உயிரிழப்புக்களை சந்திக்க நேரிடும்.

அத்துடன் சாரதிகள் வாகனம் செலுத்தும் போது கையடக்க தொலைபேசிகளில் உரையாடுவது- பாடல்களை அதிக சத்தத்துடன் ஒலிக்க செய்வது போன்ற விடயங்களில் பொலிஸார் கூடுதலான கவனம் செலுத்தும் பட்சத்தில் விபத்துக்களை தடுக்கலாம் என வைத்திய கலாநிதி கு.அகிலேந்திரன் தெரிவித்தார்.