போலி நகைகளை அரச வங்கியில் அடகு வைத்து பணம் பெற்ற இளைஞன் சிக்கினார்!!

989

அக்கரைப்பற்றில் தங்க முலாசம் பூசப்பட்ட போலி நகைகளை அரச வங்கி கிளையொன்றில் ஏமாற்றி அடகு வைத்து பணம் பெற்ற குற்றச்சாட்டில் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் திருக்கோவில் பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவரை, அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தின் குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி எம்.எச்.எம். ஹஸீப் தலைமையிலான குழுவினர் நேற்றையதினம் (08-04-2024) கைது செய்துள்ளது.

அக்கரைப்பற்று, சாகாமம் வீதியில் அமைந்துள்ள அரச வங்கி ஒன்றின் கிளையில், கடந்த ஆண்டு தங்க முலாசம் பூசப்பட்ட போலி நகைகளை சந்தேக நபர் அடகு வைத்து, 10 லட்சம் ரூபாய் பணத்தைப் பெற்றார் என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்தப் பின்னணியில், குறித்த வங்கிக் கிளையில் அடகு வைக்கப்பட்ட நகைகளை அதிகாரிகள் ஆய்வு செய்தபோதே, தங்க முலாசம் பூசப்பட்ட போலி நகைகள் அடகு வைக்கப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் குறித்த வங்கிக் கிளையினர் இது தொடர்பாக செய்த முறைப்பாட்டுக்கு அமைய, திருக்கோவில் பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய சந்தேக நபர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றில் சந்தேக நபர் நாளைய தினம் ஆஜர் செய்யப்படவுள்ளதாக, அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தின் குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர்.