பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் பலியான விமானப்படை வீரர் : விசாரணையில் வெளியான முக்கிய தகவல்!!

690

பாதுக்க (Padukka) அங்கமுவ பிரதேசத்தில் நேற்று (08) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு தாக்குதலில் விமானப்படை வீரர் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் விமானப்படையினர் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

விமானப்படை ரக்பி அணியில் கடமையாற்றிய விமானப்படை வீரரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக இலங்கை விமானப்படை ஊடகப் பேச்சாளர் குரூப் கப்டன் துஷான் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

பொலிஸாரும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் அங்கமு பிரதேசத்தில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், உயிரிழந்த நபர் பயணித்த குறித்த மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் குறித்த நபர் பொலிஸாரின் உத்தரவையும் மீறி மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்றதுடன் பொலிஸாரை நோக்கி பல தடவைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.

இதன்போது தற்காப்புக்காக பொலிஸாரும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் சிகிச்சைக்காக பாதுக்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஹொரண, தல்கஹவில பிரதேசத்தில் நேற்றுமுன் தினம் (07) இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவத்தில் குறித்த நபர் பிரதான சந்தேகநபர் எனவம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் இவர் ஐஸ் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.