முயற்சியை நம்புங்கள், வாழ்வில் உயரலாம்: மாணவர்களுக்கு சூர்யா அறிவுரை..!

548

ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளை கடந்த 33 ஆண்டுகளாக +2 தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு ரொக்கப் பரிசிளித்து ஊக்கப்படுத்தி வருகிறது.
நேற்று சென்னை சர்.பிடி.தியாகராயர் அரங்கில் நடந்த 34வது ஆண்டு விழாவில் தமிழகத்தில் தரமான மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை இனம் கண்டு 25 மாணவர்களுக்கு தலா 10ஆயிரம் ரூபாயை சிவகுமார், சூர்யா, கார்த்தி மூவரும் இணைந்து வழங்கினார்கள்.

நிகழ்ச்சியில் சூர்யா பேசுகையில், இந்த நிகழ்ச்சிகளை நாங்கள் சிறுவயதிலிருந்தே பார்த்து வருகிறோம். அப்பா செய்கிற உதவிகளைப் பார்த்து நாமும் செய்ய வேண்டும். அதுவும் கல்விக்கு செய்யும் உதவியே சிறந்தது என்று உணர்ந்தோம்.

அப்பாவை விட சில மடங்காவது அதிகம் செய்தால் தான் வளர்ச்சி. அகரம் பவுண்டேஷன் அப்பாவின் பொறுப்பை பகிர்ந்து கொண்டது.

தரமான மதிப்பெண்கள் பெற்ற அடித்தட்டு மாணவர்கள் கல்வி வளர்ச்சிக்கு உதவுவது என்று முடிவு செய்தது. தன்னாலான பணிகளைச் செய்து இதுவரை 650 மாணவர்களின் கல்லூரிக் கனவை நனவாக்கியிருக்கிறது.

மேலும் “விதை” திட்டத்தின் கீழ் பண உதவி மட்டுமின்றி மாணவர்கள் சமூகத்தை எதிர்கொள்ளும் பயிற்சியையும் அளித்து வருகிறது.

நான் பல ஆண்டுகளாக இந்த நிகழ்ச்சியை பார்த்து வருகிறேன். இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் நம்நாட்டுச் சூழல் மாறாமல் இருப்பது வருத்தம்தான்.

இன்றும் மின்சார வசதி இல்லாமல், பணவசதி இல்லாமல் சிரமப்படுகிறார்கள். இவர்களுக்கு உதவ முடிகிறதே என்று சந்தோஷப்பட்டாலும் நிலைமை இன்றும் மாறாமல் இருப்பதில் வருத்தப்பட வேண்டியும் இருக்கிறது.

இந்தப் பணியை அகரம் எடுத்து நல்ல முறையில் செய்ய விரும்புகிறது. இதுவரையில் அகரம் பெரிய மாற்றத்தை செய்திருக்கிறது.

ஒரு நடிகனாக நடித்தோம் போனோம் என்பதில் பெருமையில்லை. இதுமாதிரி செயல்கள் செய்வதால்தான் வாழ்க்கை முழுமை அடைவதாக உணர முடியும்.

நீங்கள் எல்லாருமே போராட்டங்களை சந்தித்து வந்திருக்கிறீர்கள். போராட்டங்களை விட்டுவிட வேண்டாம், போராட்டத்தை நம்புங்கள் சின்ன சின்ன முயற்சிகளை நம்புங்கள். அதற்கும் மரியாதை கொடுங்கள்.

என் அப்பா அறிவுரை கூறும் போது 25 வயதுவரை எதற்கும் அடிமையாகாமல் இருந்து விட்டால் அவன் எதற்கும் எப்போதும் அடிமையாக மாட்டான் என்று கூறுவார்.

இது பருவ வயது, உங்களுக்குள் பல விஷயங்கள் உள்ளே வந்து விழும். நல்லதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். கெட்டவற்றை அணை போட்டு தடுத்து விடுங்கள்.

பழக்கம்தான் நம்மை அடையாளப்படுத்தும். பழக்கமாக நுழைந்த எதுவும் நம்மை அடிமைப்படுத்தாமல் பார்த்துக் கொள்ளுங்கள். வேண்டுமானால் நல்ல பழக்கங்களுக்கு மட்டுமே அடிமையாக இருங்கள்.

இங்கே நிறைய மதிப்பெண் எடுத்தவர்கள் வந்திருக்கிறீர்கள். மதிப்பெண் எடுப்பது மட்டுமே சாதனை இல்லை. ஒழுக்கமும் முக்கியம். நல்ல மனிதனாகவும் இருக்க வேண்டும். வாழ்க்கையை எதிர்கொள்ள வேண்டும். பிறரை மதியுங்கள் உலகில் என்ன நடக்கிறது என்று காது கொடுத்து கேளுங்கள்.

இந்த ஊக்க உதவி செயல்களை எடுத்து நடத்த முடியும் என்பது பெரிய ஆசீர்வாதமாக உணர்கிறேன். இதே பணியை என் மகளும் செய்து இந்த ஆசீர்வாதங்களை பெற ஆண்டவன் அருள் கிடைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

அத்துடன் உத்தரகாண்ட் பேரழிவு நிவாரணத்துக்காக பிரதமர் நிவாரணநிதியாக 10 லட்ச ரூபாய் வழங்குவதாகவும் சூர்யா அறிவித்தார்.

நிகழ்ச்சியின் தொடக்கத்தில் நடிகர் கார்த்தி அனைவரையும் வரவேற்று அறக்கட்டளை வளர்ந்த வரலாற்றை எடுத்துக் கூறினார்.

சிவகுமார் பேசும் போது, படித்து மேதையான அப்துல்கலாம், சீனிவாச சாஸ்திரி பற்றியும் படிக்காது மேதையான காமராஜர், எம்.ஜி.ஆர், இளையராஜா போன்றவர்கள் பற்றியும் விளக்கினார்.

சிவகுமார் அறக்கட்டளை–அகரம் அமைப்புகள் மூலம் வாழை என்ற அமைப்புக்கு 2 லட்ச ரூயாயும், பேராசிரியர் கல்விமணி என்கிற கல்யாணி திண்டிவனத்தில் நடத்தும் தாய் தமிழ்ப் பள்ளிக்கு ஒரு லட்சரூபாயும் வழங்கப்பட்டன.