ஆசியத் தடகளப் போட்டி : புனேயில் ஜுலை 3 -7 வரை..!

387

ஆசியத் தடகளப் போட்டிகள் இந்தியாவின் புனே நகரில் இம்மாதம் மூன்றாம் திகதி தொடங்கி ஏழாம் திகதி வரை நடைபெறவுள்ளன.

ஆசியாவில் நடைபெறும் முன்னணி தடகளப் போட்டியாக இது பார்க்கப்படுகிறது. இப்போட்டியில் 43 ஆசிய நாடுகளிலிருந்து சுமார் 600 வீரர்கள் பங்குபெறுகின்றனர். புனே ஸ்ரீ ஷிவ் சத்திரபதி விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ள இந்த 20 ஆவது ஆசியத் தடகளப் போட்டியை மராட்டிய மாநில அரசும், இந்தியத் தடகளச் சம்மேளனமும் இணைந்து நடத்துகின்றன. ஆசியத் தடகளப் போட்டிகள் 24 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் நடைபெறுகிறது.

கடந்த 2011ஆம் ஆண்டு ஜப்பானின் கோபே நகரில் நடைபெற்ற போட்டியில் பட்டம் வென்ற 14 வீரர்கள் புனே போட்டியில் தமது பட்டத்தை தக்கவைத்துக் கொள்ள போட்டியிடுகிறார்கள் என்று இந்தியத் தடகளச் சம்மேளனம் கூறுகிறது. புனேவில் நடைபெறவுள்ள இந்த ஆசியத் தடகளப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வெல்பவர்கள் அடுத்த மாதம் மாஸ்கோவில் நடைபெறவுள்ள உலகத் தடகளப் போட்டிகளில் பங்குபெறும் தகுதியை பெறுவர்.

இதனிடையே ஆசியத் தடகளச் சம்மேளனத் தலைவர் பதவிக்கான போட்டியில், இந்தியாவில் சுரேஷ் கல்மாடி தோல்வியடைந்துள்ளார். புனேயில் ஆசியத் தடளப் போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில், ஆசியத் தடகளச் சம்மேளனத்தின் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் கல்மாடி மீண்டும் தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். அவரை எதிர்த்து கத்தார் நாட்டு தடகளச் சம்மேளனத்தின் தலைவரும், ஆசிய அமைப்பின் துணைத் தலைவராகவும் இருக்கும் தல்ஹான் ஜுமான் அல் ஹமாத் அவர்கள் போட்டியிட்டார்.

இதில் 18-20எனும் வாக்கு வித்தியாசத்தில் தல்ஹான் ஹமாத் வெற்றி பெற்றார். கடந்த 13 ஆண்டுகளாக ஆசியத் தடகளச் சம்மேளனத்தின் தலைவர் பதவியில் சுரேஷ் கல்மாடி இருந்தார் என்பது குறிப்பிடத்தகுந்தது.2010ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகளின் போது முறைகேடுகளில் ஈடுபட்டதான குற்றச்சாட்டின் பேரில் கைதாகி பத்து மாதங்கள் சிறையில் இருந்த சுரேஷ் கல்மாடி தற்போது பிணையில் வெளிவந்துள்ளார்.