சாதி மாறியதால் நின்று போன திருமணம்.. கண்ணீருடன் காவல்துறையில் புகார் அளித்த இளம்பெண்கள்!!

240

ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி காந்தி நகர் மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் விருத்திகா. இவர் அதே பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனையில் பயிற்சி செவிலியராக பணிபுரிந்து வருகிறார்.


இவரது தாயார் சிறுவயல் பகுதியில் நடந்த திருமணத்திற்கு சென்றிருந்தார். அப்போது அதே பகுதியில் வசித்து வரும் மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த வினோதினியோடு அறிமுகமானார்.

வினோதினியின் தம்பிக்கு விருத்திகாவை திருமணம் செய்து வைக்க கேட்டனர். இதன் அடிப்படையில், இரு வீட்டாரும் சந்தித்து பரஸ்பரம் மணம் முடிக்க பேசி முடிவெடுத்தனர்.


வினோதினியோ, அவரது தந்தை சந்திரன் தாய் லதா இவர்களுடன் சென்று தனது மூத்த தம்பியான பூமிநாதனுக்கு விருத்திகா வீட்டில் வைத்து பூ வைத்து நலங்கு செய்தனர். நாளைய தினம் திருமணம் நடைபெற இருந்ததால் பத்திரிகை அடித்து இரு வீட்டாரும் உறவுகளை அழைத்து தாலி தாம்பூலம் என திருமணத்திற்கு தேவையான அனைத்து பொருட்களையும் வாங்கினர்.

இருவீட்டாரும் திருமணத்திற்கு தயாராக இருந்த நிலையில் திருமணத்தை பதிவு செய்வதற்காக விருத்திகாவின் கல்வி சான்றிதழை மாப்பிள்ளை விட்டார் கேட்டனர். அதில் தான் விருத்திகா மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இதனையடுத்து மணமகனின் ஊராருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பெண் வீட்டார் மாற்றுச் சமூகத்தினர் என்பதால் திருமணத்தை உடனடியாக நிறுத்தவேண்டும். இல்லையெனில் வீட்டில் நடக்கும் சுக, துக்க நிகழ்வுகளில் கலந்து கொள்ள மாட்டோம். ஊரை விட்டு ஒதுக்கி வைத்துவிடுவோம் என கிராம மக்கள் கூறியுள்ளனர்.

இதனால் மாப்பிள்ளையின் வீட்டார் திருமணத்தை நிறுத்துமாறு தெரிவித்துள்ளனர். திருமணத்திற்கு அனைத்து வேலைகளையும் செய்து முடித்துவிட்ட நிலையில், திடீரென மணமகன் வீட்டார் கூறியதை கேட்டு பெண் வீட்டார் திகைத்தனர்.

எத்தனையோ எடுத்துக் கூறியும் மாப்பிள்ளை வீட்டார் சம்மதம் தெரிவிக்காமல் திருமணத்தை நிறுத்துவதில் உறுதியாக இருந்தனர்.

மணமகள் விருத்திகா தன்னை தன் எதிர்கால கணவனோடு சேர்த்து வைக்க வேண்டும் என கண்ணீர் மல்க ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் இடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன் பூமிநாதனின் உறவுக்கார பையனான அதே சிறுவயல் பகுதியைச் சேர்ந்த ராஜேஸ்வரனுக்கும், விருத்திகாவின் உறவுக்கார பெண்ணான சிந்து நதிக்கும் திருமணம் பேசி முடித்துள்ளனர்.

அந்த திருமணத்தையும் சிறுவயல் கிராமத்தாரின் அறிவுறுத்தலின் அடிப்படையில் நிறுத்தி விட்டதாக கூறி 2 இளம் பெண்களும் கண்ணீர் மல்க காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளனர்.

இந்த இரு திருமணத்திலும் மாப்பிள்ளைகள், அவரது குடும்பத்தாருக்கோ பெரிய அளவில் எதிர்ப்பு இல்லாத நிலையில், ஊராரின் அச்சுறுத்தலின் பேரில் இந்த திருமணம் நிறுத்தப்பட்டதாக சொல்லப்படும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.