சவூதி அரேபியாவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டு பணியாளர்களின் மூன்று மாத மன்னிப்புக் காலம் நாளையுடன் (ஜுலை 3) முடிவடையவுள்ள நிலையில் தம்மீதான சட்ட ரீதியான நடவடிக்கையை தவிர்ப்பதற்கு மேலும் ஆயிரக்கணக்கான பணியாளர்கள் போராடி வருகின்றனர்.
சவூதி மன்னர் அப்துல்லாஹ்வினால் கடந்த ஏப்ரல் 3 ஆம் திகதி அறிவிக்கப்பட்ட மூன்று மாத மன்னிப்பு காலத்திற்குள் அங்கு தங்கியிருக்கும் சட்டவிரோத பணியாளர்கள் தாம் தங்கியிருப்பதை சட்ட ரீதியாக்குவதற்கு அல்லது நாட்டை விட்டு வெளியேறுவதற்கு அனுமதிக்கப்பட்டனர்.
இவ்வாறு தங்கியிருப்போர் கருப்புப்பட்டியல் அல்லது சிறை மற்றும் அபராதத்தில் இருந்து தவிர்ப்பதற்கே இந்த மூன்று மாத மன்னிப்புக்காலம் விதிக்கப்பட்டது.
சவூதியில் இலங்கையர் உட்பட ஆசிய நாட்டவர்களே அதிகம் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் மன்னிப்புக் காலத்தில் முதல் இரு மாதங்களில் அங்கு தங்கியிருந்த 1.5 மில்லியன் சட்டவிரோத வெளிநாட்டு பணியாளர்கள் மன்னிப்பைப் பெற முன்வந்ததாக சவூதி தொழில்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
எனினும் சவூதியில் தங்கியிருக்கும் சட்டவிரோத வெளிநாட்டு பணியாளர்களின் எண்ணிக்கை குறித்து அறிவிக்கப்படவில்லை. ஆனால், இது இரண்டு மில்லியனாக இருக்கும் என சந்தேகிக்கப்படுகிறது.
சவூதி அண்மையில் கொண்டு வந்த சட்டவிரோத குடியிருப்பாளர்களை வெளியேற்றும் சட்டத்தின் கீழ் இந்த ஆண்டு ஆரம்பம் தொட்டு சுமார் 180,000 சட்டவிரோத பணியாளர்கள் நாட்டை விட்டு வெளியேறியதோடு மேலும் 200,000 அதிகமானவர்கள் வெளியேற்றப்பட்டனர்.
எனினும் மூன்று மாத மன்னிப்புக்காலம் நிறைவடையும் தருவாயிலும் பல பணியாளர்களும் சவூதியில் இருந்து வெளியேற அல்லது தமது பணியாளர் அந்தஸ்தை சட்டரீதியாக்குவதற்கு எதிர்பார்த்து தத்தமது தூதரகங்களுக்கு முன்னால் நீண்ட வரிசையில் காத்து நிற்கின்றனர்.
சவூதி அறிமுகப்படுத்திய புதிய சட்டத்தின் படி வெளிநாட்டு பணியாளர்கள் தமது தொழில் வழங்குனரிடம் மாத்திரமே அனுசரணை பெற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சவூதி தனது மன்னிப்புக் காலத்தை நீடிக்குமா என்ற எதிர்பார்ப்புடன் மேலும் ஆயிரக்கணக்கான பணியாளர்கள் காத்துள்ளனர். மன்னிப்புக்காலம் நிறைவடைந்ததும் சட்டவிரோத பணியாளர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பதாக சவூதி நிர்வாகம் எச்சரித்துள்ளது.
உலகில் அதிக எண்ணெய் ஏற்றுமதி நாடான சவூதியில் எட்டு மில்லியன் வெளிநாட்டு பணியாளர்கள் உள்ளதாக உத்தியோகபூர்வ தரவுகள் குறிப்பிடுகின்றன. இந்த பணியாளர்களின் எண்ணிக்கையை குறைத்து வேலையின்றி இருக்கும் மில்லியன் கணக்கான சவூதி நாட்ட வர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கவே அந்நாட்டு அரசு கடுமையான சட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
அரபுலகில் மிகப்பெரிய பொருளாதார சக்தியான சவூதியில் வேலையில்லாதோர் எண்ணிக்கை 12.5 வீதத்தை தாண்டியுள்ளது.
இந்நிலையில் மன்னிப்புக் காலத்திற்கு பின்னரும் சவூதியில் தங்கியிருக்கும் சட்டவிரோத வெளிநாட்டு பணியாளர்கள் இரண்டு வருடத்திற்கு மேற்பட்ட சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டி வரும் என சவூதி அரசு எச்சரித்திள்ளது. எனினும் இந்த புதிய சட்டம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பணியாளர்களுக்கு சாதகமானது என பொருளியல் ஆய்வாளர் பதல் அல் பவ்வனைன் குறிப்பிட்டுள்ளார்.
“தொழிற்சந்தையை சவூதி நாட்டவர்களுக்கு திறந்து விடவும் வெளிநாட்டு பணியாளர்கள் தமது அனுசரணையாளரிடம் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாவதை தடுக்கவும் இந்த புதிய சட்டம் உதவுகிறது” என அவர் நியாயப்படுத்தியுள்ளார்.