காதலிச்சவளே மனைவியாக அமைவது எல்லாம் வரம் தான். ஆனாலும் வாழ்க்கை அத்தனை சந்தோஷமாக சதீஷூக்கு செல்லவில்லை. மனைவியின் தாயார் இந்த ஜோடியை நிம்மதியாக வாழ விடவில்லை என்று தெரிய வருகிறது.
திருமணம் ஆனதில் இருந்தே அடிக்கடி தாய் வீட்டிற்கு சென்று வந்துள்ளார் நந்தினி. இதனால் கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு எழுந்துள்ளது. சென்னை அரும்பாக்கம் ராஜாஜி தெருவை சேர்ந்தவர் சதீஷ் (28). வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார்.
இவர் நந்தினி என்ற பெண்ணை 2 ஆண்டுகளாக காதலித்து 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். ஆனால், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதையடுத்து, மனைவி நந்தினி கோயம்பேட்டில் உள்ள தாய் வீட்டுக்குச் சென்றார்.
இந்நிலையில், சதீஷ் தனது மனைவியை செல்போனில் தொடர்பு கொண்டு, தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார். ஆனால் வர முடியாது என்று திட்டவட்டமாக கூறிவிட்டார்.
இதனால் வேதனை அடைந்த சதீஷ் மனைவிக்கு வீடியோ கால் செய்து, தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கூறி போனை அணைத்து விட்டார். அதிர்ச்சியும், பதட்டமும் அடைந்த மனைவி மற்றும் குடும்பத்தினர் சதீஷ் வீட்டிற்கு உடனடியாக சென்று பார்த்த போது, வீட்டின் கதவு உட்புறமாக பூட்டி கிடந்தது.
எவ்வளவோ தட்டியும் கதவை திறக்காததால் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்த போது சதீஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதைப் பார்த்தனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மனைவி நந்தினி கதறி அழுதார்.
இது குறித்து உடனடியாக அரும்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சதீஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு, இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.