சென்னை ரெட்டேரி பகுதியில் வசித்து வருபவர் அருண்குமார் (30). இவர், தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி துர்கா (26). இவர்களுக்கு திருமணமாகி 3 வருடங்கள் ஆகிறது.
தற்போது 6 மாத கர்ப்பிணியான துர்கா, தனது ஒன்றரை வயது பெண் குழந்தையான கிருத்திகாவுடன் துராபள்ளத்தில் உள்ள தாய் வீட்டில் தங்கி இருந்தார்.
இந்நிலையில், நேற்று மதியம் வீட்டில் தாய் துர்கா தூங்கிகொண்டு இருந்தார். குழந்தை கிருத்திகா தாய் பக்கத்தில் விளையாடிக்கொண்டு இருந்தது. சிறிது நேரத்தில் குழந்தை கிருத்திகாவை காணவில்லையே என துர்கா தேடினார்.
அப்போது வீட்டின் வெளியே 2 அடி ஆழம் உள்ள தண்ணீர் தொட்டியில் குழந்தை கிருத்திகா தவறி விழுந்திருப்பது தெரிய வந்தது. அதிர்ச்சி அடைந்த துர்கா குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த குழந்தை கிருத்திகாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து ஆரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது