வாடகை கொடுக்க முடியவில்லை… மகனை கொலை செய்து தாய் எடுத்த விபரீத முடிவு!!

215

கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரில் வசித்து வந்தவர் 42 வயது ஸ்ரீதர். இவரது மனைவி ரம்யா. இவர்கள் பெற்றோர் எதிர்ப்பையும் மீறி அவர்கள் 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்தனர். இந்த தம்பதிக்கு 19 வயதில் மகளும், 13 வயதில் பார்கவ் என்ற மகனும் இருந்தனர்.

அவர்கள் பெங்களூரு எலகங்காவில் உள்ள குடியிருப்பு ஒன்றில் வாடகைக்கு வசித்து வந்தனர். 19 வயது மகள் தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். இதற்காக அந்த பகுதியில் உள்ள விடுதியில் அவர் தங்கி உள்ளார்.

இந்நிலையில் ஸ்ரீதருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்தார். எனினும் அவருக்கு உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை. இதனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீதர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து 13 வயது மகனுடன் ரம்யா குடியிருப்பில் வசித்து வந்தார். அவரால் வாடகை செலுத்த முடியாமல் போனது. மேலும் குடும்ப செலவுகளுக்கு போதிய அளவு வருவாய் கிடைக்காததால் ரம்யா மனமுடைந்து காணப்பட்டார்.

இந்நிலையில் ரம்யா தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளார். இதையடுத்து கடந்த 9-ம் தேதி விடுதியில் தங்கி உள்ள தனது மகளை செல்போனில் தொடர்பு கொண்டு ரம்யா பேசினார்.

பின்னர் அன்றைய தினம் வீட்டில் உள்ள ஒரு அறையில் சேலையை கொண்டு தனது மகனை முதலில் தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்தார். பின்னர் அதே சேலையில், ரம்யாவும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதற்கிடையே தாய் தன்னை செல்போனில் அழைக்காததால் விடுதியில் இருந்து மாணவி வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் கதவுகள் உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது தாய், மகன் 2 பேரும் தூக்கில் பிணமாக தொங்கியதைப் கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து எலகங்கா போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

அவர்கள் 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். மேலும் வீட்டில் சோதனை செய்தபோது ரம்யா கைப்பட எழுதிய கடிதம் சிக்கியது. அதில் தங்களது சாவுக்கு நிதி நெருக்கடி தான் காரணம் என கூறப்பட்டு இருந்தது.

இதையடுத்து போலீசார் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் தாய், மகன் 2 பேரும் கடந்த 4 நாட்களுக்கு முன்பே தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.