நீர்வீழ்ச்சி அருகே ரீல்ஸ் செய்துகொண்டிருந்த இளம்பெண் 300 அடி உயர பள்ளத்தில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைதளங்களில் ரீல்ஸ் செய்வதற்காகவும், வீடியோ போடுவதற்காகவும் பலரும் தங்களது உயிரை பொருட்படுத்தாமல் துணிச்சலான விடயங்களை செய்து வருகின்றனர். சில நேரம் அது ஆபத்தில் முடிகிறது.
இந்திய மாநிலமான மஹாராஷ்டிரா, ராய்காட் மாவட்டத்தில் உள்ள கும்பே நீர்வீழ்ச்சிக்கு ஆன்வி கம்தார் (27) என்ற இளம்பெண் ஒருவர் தனது நண்பர்களுடன் சுற்றுலா சென்றிருந்தார்.
அப்போது அவர் நீர்வீழ்ச்சியின் அருகே ரீல்ஸ் செய்து கொண்டிருந்தார். அந்த நேரத்தில் 300 அடி உயர பள்ளத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
அவர், ரீல்ஸ் எடுத்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. பின்னர், சம்பவம் குறித்து தகவலறிந்த மீட்பு படையினர் விரைந்து வந்தனர்.
இதையடுத்து, 6 மணிநேர போராட்டத்திற்கு பிறகு பள்ளத்தாக்கில் இருந்து பெண்ணை பத்திரமாக மீட்டனர். அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.