வவுனியாவில் கடற்படை வீரர் ஒருவர் காட்டு யானை தாக்குதலால் உயிரிழந்துள்ளார்.
பூனாவ கடற்படை முகாமில் கடமையாற்றிய கடற்படை வீரரான லெப்டினன்ட் தர அதிகாரியே யானை தாக்கியதில் நேற்று இரவு (29.11) உயிரிழந்துள்ளதாக பூனாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், பணி நிமித்தமாக கொழும்புக்கு சென்று திரும்பிய அதிகாரி முகாமிற்கு சென்று கொண்டிருந்த போது யானை தாக்கியுள்ளது.
யானை தாக்கியதில் பலத்த காயம் அடைந்த அவரை, கடற்படையினரும், உள்ளூர் மக்களும் இணைந்து வவுனியா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பலத்த காயமடைந்த அதிகாரி வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த உத்தியோகத்தரின் மரணம் தொடர்பான நீதவான் விசாரணைகளின் பின்னர், பிரேத பரிசோதனை வவுனியா பொது வைத்தியசாலையில் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பூனாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.