இவ்வருட இறுதிக்குள் சிம் அட்டைகளை பதிவு செய்யாவிட்டால் சட்டநடவடிக்கை!!

628

SIM

இலங்கையில் உள்ள கையடக்க தொலைபேசி நிறுவனங்கள் வழங்கியுள்ள சகல சிம் அட்டைகளும் இந்த வருட இறுதிக்குள் பதிவு செய்யப்பட வேண்டும் என சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கைத் தொலைத் தொடர்புகளை ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இலங்கையில் தற்போது 21 மில்லியனுக்கு மேற்பட்ட கையடக்கத் தொலைபேசி இணைப்புகள் வழங்கப்பட்டிருப்பதாக ஆணைக்குழுவின் தலைவர் அனுஷ பெல்பிட தெரிவித்துள்ளார்.

புதிதாக வழங்கப்படும் சிம் அட்டைகள் மூன்று நாட்களுக்கு பதிவு செய்யப்பட வேண்டியது கட்டாயம். இதற்கு முன்னர் வழங்கப்பட்ட பெருந்தொகையான சிம் அட்டைகள் பதிவு செய்யப்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

கல்கமுவ – மீகலேவ பிரதேசத்தில் சிறுவன் கடத்தப்பட்ட சம்பவத்தை அடுத்தே சிம் அட்டைகளை பதிவு செய்ய வேண்டும் என்ற யோசனைகள் மீண்டும் முன்வைக்கப்பட்டுள்ளன.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இது குறித்து தகவல் வெளியிட்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன, சிறுவனை கடத்திச் சென்றவர்களிடம் 7 சிம் அட்டைகள் இருந்துள்ளன. அவர்கள் இரண்டு சிம் அட்டைகளை பிரதானமாக பயன்படுத்தி வந்துள்ளனர்.

7 சிம் அட்டைகளில் ஒன்று கொழும்பில் மூட்டை தூக்கும் தொழிலில் ஈடுபடும் ஒருவரின் பெயரில் இருக்கின்றது. குருணாகலில் இருக்கும் தொலைபேசி நிறுவனம் ஒன்றின் முகவர்கள் எந்த அடையாள அட்டைகளையும் பெறாது சிம் அட்டைகளை விநியோகித்து வருகின்றனர்.

எவராது சிம் அட்டையை கொள்வனவு செய்ய வரும் போது அவர்களிடம் அடையாள அட்டை இல்லையென்றால், முன்னர் வாங்கியவர்களின் அடையாள அட்டையை பயன்படுத்தி அந்த முகவர் நிறுவனம் சிம் அட்டைகளை வழங்கியுள்ளது.

இது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். கடத்தலுக்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் சிம் அட்டைகளை விற்ற நபர்களை கைது செய்வோம் என பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.