சப்ரகமுவ பல்கலைக் கழகத்தில் தொடரும் தமிழ் மாணவர்கள் மீதான கெடுபிடிகள் கவலையளிக்கிறது : ஸ்ரீ ரெலோ செயலாளர் நாயகம் ப.உதயராசா!!

645

Uthayarasaமுற்பது வருடகால யுத்தத்தினால் சொல்லொனா துன்பங்களை அனுபவித்து இழப்பதற்கு எதுவுமின்றி கல்வியை தொடரும் நோக்கோடு பல்கலைக் கழகங்களுக்கு செல்லும் மாணவர்கள் அச்சுறுத்தப் படுவதும், தாக்கப் படுவதும் எல்லாவற்றுக்கும் மேலாக கைது செய்யப்படுவதும் கவலையளிக்கின்றது.

இன மத சாதி பேதங்களை கடந்து, உயர்வு தாழ்வுகளுக்கு அப்பால் அனைவரும் நண்பர்களாக பழகும் இடமாக திகழ்ந்து வந்த பல்கலைக் கழகங்களுக்குள் அரசியலும், இனவாதமும் புகுந்து மாணவர்களை பிளவுபடுத்துவது மட்டுமன்றி பிள்ளைகளை கல்விகற்க அனுப்பிய பெற்றோர்களையும் பரிதவிக்க வைத்துள்ளது.

நேற்றுமுன்தினம் சப்ரகமுவ பல்கலைக் கழகத்திற்கு சென்ற 23 வயதான யோ.நிறோயன் எனும் வவுனியாவைச் சேர்ந்த முன்னாள் போராளி ஒருவர் கைது செய்யப்பட்டமை தவிர்க்க முடியாத காரணங்களினால் கல்விகற்கும் வயதில் போராட்டத்தில் இணைந்துகொண்டு பின்பு புனர்வாழ்வு பெற்று தாங்களும் தங்களது கல்வியும் என வாழ்ந்து வரும் ஏனைய முன்னாள் போராளி மாணவர்கள் மத்தியிலும் இனம்புரியாத அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் போராளிகளின் நிழலில் வாக்குகளை பெற்று தொடர்சியாக பதவி சுகத்தை அனுபவித்து வரும் பிரதிநிதிகள் முன்னாள் போராளிகளுக்கான பாதுகாப்பான கல்வியைக்கூட பெற்றுக்கொடுக்க முடியாத கையாலாகாதவர்களாகி விழாக்களின் போது விருந்தினர்களாக மட்டும் கலந்துகொள்கின்றனர்.

எனவே அவர்களை நம்பியிருக்காமல் பொது அமைப்புக்கள், சிவில் சமூகத்தினர் மற்றும் சமுக ஆர்வலர்கள் ஒன்றிணைத்து அரசாங்கத்துடன் பேசி தமிழ் மாணவர்களின் பாதுகாப்பான கல்வி தொடர்பிலும், முன்னாள் போராளிகளின் சுதந்திரமான நடமாட்டம் தொடர்பிலும், சிறைகளில் வாடும் அரசியற் கைதிகளின் விடுதலை சம்மந்தமாகவும் பேசி தீர்வுக்கான முன்வர வேண்டும் என கேட்டுக்கொள்வதோடு அவ்வாறு முன்வரும் பட்சத்தில் தமிழ் மக்களின் நன்மைகளுக்காக போராடும் கட்சி என்ற அடிப்படையில் எமது அமைப்பு அதற்கான பூரண ஆதரவை வழங்க காத்திருக்கின்றோம்.

நன்றி

ப.உதயராசா,
செயலாளர் நாயகம்,
ஸ்ரீ ரெலோ.