விஜய்காந்தின் எதிர்கட்சித் தலைவர் பதவி பறிபோகுமா?

444

அதிருப்தி எம்.எல்.ஏக்கள் ஏழு பேர் மீது நடவடிக்கை எடுப்பது என்று தேமுதிக தலைவர் விஜய்காந்த் முடிவெடுத்திருப்பதன் மூலம் தமது எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இழக்க முடிவு செய்துவிட்டார் என்றே கூறப்படுகிறது.

சட்டசபை தேர்தல் முடிந்த நிலையில் திமுகவைவிட 6 எம்.எல்.ஏக்கள் கூடுதலாகப் பெற்றதால் தேமுதிக பிரதான எதிர்க்கட்சி ஆனது.

தேமுதிக தலைவர் விஜயகாந்தும் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரானார். ஆனால் சட்டசபை களேபரத்தில் சிக்கி பணிநீக்கம் ஆக நேரிட்டது போது எதிர்க்கட்சித் தலைவருக்கு உரிய வாகனத்தை பயன்படுத்துவதை தவிர்த்தார்.

அதன் பின்னரும் அந்த வாகனத்தை அவர் பயன்படுத்துவதில்லை. இந்தநிலையில் 7 எம்.எல்.ஏக்கள் அதிருப்தியாளர்களாக அதிமுக பக்கம் சாய்ந்திருந்தனர்.

ராஜ்யசபா தேர்தலிலும் அவர்கள் அதிமுகவுக்குத்தான் வாக்களித்தனர். இதைத் தொடர்ந்து அதாவது ஒரு நீண்டகாலத்துக்குப் பிறகு 7 எம்.எல்.ஏக்களையும் தற்காலிகமாக பணிநீக்கம் செய்வதாகவும் 10 நாட்களுக்குள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் ஒரு கடிதத்தை தேமுதிக மேலிடம் அனுப்பி வைத்தது.

ஆனால் அதிருப்தி எம்.எல்.ஏக்களோ கட்சியைவிட்டே நீக்கிவிட வேண்டியதுதானே என்று எகத்தாளம் காட்டி பேசி வருகின்றனர்.

இருப்பினும் 7 பேர் மீதும் மேல் நடவடிக்கை தொடரும் நிலையில் அவர்கள் கட்சி சாராதவர்களாக அறிவிக்கப்படுவர். அப்படி கட்சி சாராதவர்கள் என்று அறிவிக்கப்பட்டால் தேமுதிகவுக்கு 22 எம்.எல்.ஏக்கள்தான் இருப்பார்கள்.

இதனால் அக்கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்தை இழக்கும். விஜய்காந்தும் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இழக்க நேரிடும். ஆனால் தேமுதிக தரப்போ, ஆமா இந்த எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இத்தனை நாள் கேப்டன் அனுபவித்தாரா? போனா போகட்டும் என்றே கடுப்பான பதிலை வெளிப்படுத்துகின்றனர்.