நவுரு தீவில் அதிர்ச்சியில் உறைந்துள்ள சிறுவர்கள்!!

1027

Aus

அவுஸ்திரேலிய சுங்க கப்பலில் தடுத்து வைக்கப்பட்ட நிலையில் அதிர்ச்சியடைந்த 157 இலங்கை அகதிகள் மத்தியில் இருந்த சிறுவர்களுக்கான மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படுவதற்கு இன்னும் இரண்டு மாதங்கள் செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவுரு தீவில் பணியாற்றும் பணியாட்களின் மூலம் இந்த தகவல் வெளியாகியுள்ளது. இந்தநிலையில் குறித்த சிறுவர்களின் மனநிலை குறித்து கவலை ஏற்பட்டுள்ளதாக கிரீன் கட்சியின் செனட்டர் சாரா ஹன்சன்- யங்கின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

குறித்த சிறுவர்கள் அதிர்ச்சியுடன் காணப்படுவதாக பெயர் குறிப்பிட விரும்பாத நவுரு தீவின் பணியாளர் தகவல் வழங்கியுள்ளார்.
இந்தநிலையில் சித்திரவதை மற்றும் அதிர்ச்சி தொடர்பான நிபுணரின் வருகையை 157 இலங்கை அகதிகள் எதிர்பார்த்துள்ளனர்.

இதேவேளை இந்த157 பேரும் தங்கவைக்கப்பட்டுள்ள இடம் வெறுமையாக இருந்தமை காரணமாக சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு பிரச்சினையை எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அகதிகளின் மத்தியில் உள்ள இரண்டு வயது குழந்தை இன்னும் காலணி இன்றியே உள்ளது. கழிவறை வசதிகள் மோசமான நிலையில் உள்ளன.

இந்தநிலையில் குறித்த சிறுவர்களின் நிலை தொடர்பில் அவுஸ்திரேலிய மனித உரிமைகள் ஆணைக்குழு, விசாரணை செய்து அவர்களுக்கு நல்வாழ்வை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்று செனட்டர் ஹன்சன் யங் கோரிக்கை விடுத்துள்ளார்.

எனினும் நவுரு நிலைமை குறித்து குடிவரவுத்துறை அமைச்சர் ஸ்கொட் மொரிசனின் பேச்சாளர் தகவல் எதனையும் வழங்க மறுத்துவிட்டார். இதற்கிடையில் குறித்த அகதிகளின் புதுப்பிக்கப்பட்ட வழக்கு விசாரணை எதிர்வரும் 21 ஆம் திகதியன்று அவுஸ்திரேலிய மேல்நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது.