
வட மாகாணத்தில் வறட்சியின் காரணமாக இரண்டரை இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாடு முழுவதும் நிலவும் கடும் வறட்சி காரணமாக சுமார் ஐந்து இலட்சம் குடும்பங்களைச் சேர்ந்த 16.2 இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மைத்துறை அறிவித்துள்ளது.
குறிப்பாக குருணாகலை மாவட்டமே வறட்சியினால் மோசமாகப் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கிளிநொச்சி, மன்னார், மொனராகலை, புத்தளம், மட்டக்களப்பு, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களும் இதனால் பாதிப்படைந்துள்ளன.
சீரற்ற காலநிலை காரணமாகவே நாடெங்கும் வறட்சி ஏற்பட்டிருப்பதாக பேரிடர் மேலாண்மைத்துறையின் ஊடக உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி பிபிசியிடம் கூறினார்.
வறட்சியால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் குடிநீருக்குப் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதோடு, விவசாயச் செய்கை மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றது.
உடனடி நிவாரணமாக அரசாங்கம் வறட்சியால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்குக் குடிநீர் விநியோகத்தை முதன்மைப்படுத்தி அதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றது என அதிகாரிகள் கூறுகிறார்கள்.
கிளிநொச்சி மாவட்டத்தில் வரலாறு காணாத வகையில் இம்முறை வறட்சி நிலவுவதனால், தென்னை மற்றும் வாழை மரங்கள் பெருமளவில் அழிந்துள்ளன என்று பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கூறுகிறார்.





