இந்தியாவை வீழ்த்தியது இலங்கை – 161 ஓட்டங்களால் அபார வெற்றி..!

368

CRICKET-JAM-IND-SRI

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் நேற்று இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் இலங்கை அணி 161 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டியுள்ளது.

மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வரும் இந்தத் தொடரின், முதலாவது ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் இலங்கையும், 2-வது ஆட்டத்தில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவையும் வீழ்த்தி தொடர்ந்து 2 வெற்றிகளை கண்டுள்ளது.

இந்த நிலையில் கிங்ஸ்டனில் நேற்று நடைபெற்ற 3-வது லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதின.

உபாதை காரணமாக போட்டித்தொடரிலிருந்து டோனி விலகியதை அடுத்து நேற்றைய போட்டிக்கு விராத் கோஹ்லி தலைமை தாங்கினார். இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய இலங்கை அணி 50 ஓவர்களில் ஒரு விக்கெட்டுடை மாத்திரம் இழந்து 348 ஓட்டங்களை விளாசித்தள்ளி இந்திய பந்துவீச்சை பதம் பார்த்தது.

இலங்கை அணி சார்பில் உபுல் தரங்க ஆட்டமிழக்காமல் 174 ஓட்டங்களையும், மஹேல ஜெயவர்த்தன 107 ஓட்டங்களையும் பெற்றுக்கெடுத்தனர்.

349 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அடுத்து துடுப்பெடுத்தாட களமிறங்கிய இந்திய அணி, 44.5 ஓவர்களில் சகல விக்கெட்டுக்ளையும் இழந்து 187 ஓட்டங்ளை மட்டுமே எடுத்து படு தோல்வியைத் தழுவியது.

இலங்கை சார்பாக ஹேரத் 3 விக்கெட்களையும், சேனநாயக்க மற்றும் மலிங்க ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களையும் கைப்பற்றினர்.

இலங்கை அணி சார்பில் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய உபுல் தரங்க போட்டியின் சிறப்பாட்டகாரராக தெரிவுசெய்யப்பட்டார்.

நேற்றைய போட்டியில் இந்திய அணி பந்துவீச்சு, களத்தடுப்பு மற்றும் துடுப்பாட்டம் என அனைத்து துறைகளிலும் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

நேற்றை போட்டியில் பெற்ற அபார வெற்றி மூலம் ஒரு போனஸ் புள்ளியையும் சுவீகரித்துக்கொண்ட இலங்கை அணி இறுதிப் போட்டிக்கான வாய்ப்புகளைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.

ஏற்கனவே அணித்தலைவர் தோனியை இழந்துவிட நிலையில் நேற்றைய படுதோல்வி மூலம் இனிவரும் போட்டிகளில் கடுமையாகப் போராடவேண்டிய நிலைக்கு இந்திய அணி தள்ளப்பட்டுள்ளது.