புலிகளுக்கு உதவியதை ஒப்புக் கொண்டார் சுரேஸ் சிறீஸ்கந்தராஜா!

545
விடுதலைப் புலிகளுக்கு இராணுவத் தொழில்நுட்பங்களை பெற்றுக் கொடுக்க உதவியதாக அமெரிக்க நீதிமன்றத்தில் சுமத்தப்பட்ட குற்றத்தை கனடாவின் வாட்டர்லூ பல்கலைக்கழக பொறியியல் பட்டதாரியான சுரேஸ் சிறீஸ்கந்தராஜா ஒப்புக்கொண்டுள்ளார்.

2004 செப்டெம்பர் மாதத்திற்கும் 2006 ஏப்ரல் மாதத்திற்கும் இடையில் விடுதலைப் புலிகளின் ஆயுதக் கொள்வனவாளருக்கு, விமான கருவிகள், நீர்மூழ்கி, போர்க்கப்பல் வடிவமைப்பு மென்பொருட்கள், இரவுப்பார்வைக் கருவிகள், தொடர்பாடல் தொழில்நுட்பங்களை பெறுவதற்கு இவர் உதவியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

நியூயோர்க், புரூக்லின் நீதிமன்றத்தில், சுரேஸ் சிறீஸ்கந்தராஜா, நேற்று நடத்தப்பட்ட விசாரணையின் போது விடுதலைப் புலிகளுக்குத் தாம் இராணுவத் தொழில்நுட்பங்களை பெறுவதற்கு உதவியதை ஒப்புக் கொண்டார்.

இதையடுத்து அவருக்கு 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்று கருதப்படுகிறது.

2006இல் ரொரொன்ரோவில் கைது செய்யப்பட்ட சுரேஸ் சிறீஸ்கந்தராஜா, ஏற்கனவே சிறையில் இருந்து வருவதால், அவரது தண்டனைக்காலம் குறைக்கப்பட வாயப்புகள் உள்ளதாக கனேடிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையில் பிறந்து கனேடியக் குடியுரிமை பெற்ற இவர், தண்டனைக்காலம் முடிந்த பின்னர் அமெரிக்காவில் இருந்து கனடாவுக்கு நாடு கடத்தப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.