விநாயகர் சதுர்த்தி விரதமும் அதன் சிறப்பும்!!

565

Vinayagar_Chathurthi1

ஓம் என்ற பிரணவப் பொருளை தன் முக உருவமாக கொண்டவர் விநாயகப் பெருமான். பிரணவம் தான் உலகம் இயங்க முக்கிய காரணி. அதே போல் ஓங்காரம் இல்லாமல் எழுத்துகள் இல்லை. ஓங்காரத்தில் இருந்து தான் உலகம் தோன்றியது என்பது ஆன்மிகத்தின் ஆழ்ந்த கருத்தாகும்.

‘உ’ என்பது பிள்ளையார் சுழி. இந்து மதத்தினர் எதையும் எழுதத் தொடங்கும் பொழுது, இந்த குறியை முதலில் போட்டு எழுதவேண்டும் என்ற நியதி வழக்கத்தில் இருந்து வருகிறது. விக்கினமின்றி அனைத்து காரியங்களும் சுபமாக நடைபெற வேண்டும் என்னும் எண்ணத்துடன், பயபக்தியுடன் முதலில் போடும் ஒரு குறியாக இந்த பிள்ளையார் சுழி கருதப்படுகிறது. இந்த புனிதக் குறியின் அதிதெய்வம் விநாயகர் ஆவார்.

ஒரு முறை தாய் தந்தையரான சிவன்– பார்வதி, தம்பி முருகர் ஆகியோருடன் கயிலையில் வீற்றிருந்தார் விநாயகப்பெருமான். அப்போது தேவர்கள் பலரும் அங்கு வந்து அந்த அரியக் காட்சியை கண்டு தரிசனம் செய்தனர். தேவர்களில் ஒருவரான சந்திரனும் அம்மையப்பரை வணங்கி, அவர்களின் புதல்வர்களையும் வழிபட்டார்.

யானைத் தலையும், தொந்தி வயிறுமாக காட்சியளித்த விநாயகப் பெருமானைப் பார்த்ததும் சந்திரனுக்கு சிரிப்பு வந்தது. அவர் விநாயகரைப் பார்த்து கேலியாக சத்தம் போட்டு சிரித்து விட்டார். இதனை கண்டு கோபமுற்ற விநாயகர், ‘சந்திரா! அழகாக இருக்கிறோம் என்ற ஆணவம் காரணமாகத்தானே உனக்கு என்னைக் கண்டதும் இகழ்ச்சி ஏற்பட்டது. பெரியவர்கள் சபையில் அடக்கமின்றி நகைத்த நீ, உலகத்தில் பிரகாசம் இன்றி மறைந்து போவாயாக…’ என்று சபித்தார்.

பதறிப்போனான் சந்திரன். விநாயகரின் திருவடிகளில் விழுந்து கதறி அழுதான். தெரியாமல், அறியாமல் செய்து விட்ட பிழைக்காக தன்னை மன்னித்து அருளும்படி கூறி வருந்தினான்.சந்திரனின் ஒளி மறைந்ததால் அமுத பானம் கிடைக்காத தேவர்கள் இந்திரனிடம் சென்று முறையிட்டனர். இந்திரன் மற்ற தேவர்களுடன் சென்று விநாயகமூர்த்தியை தொழுது நின்றான். ‘ஐயனே! சந்திரனின் பிழையை மன்னித்து அருளுங்கள். அவனால் மற்ற ஏனைய உயிர்கள் வாடுகின்றன’ என்று வேண்டினான்.

அவனது வேண்டுதலால் மனம் இரங்கிய விநாயகர், ‘இந்திரா! ஆவணி மாத சுக்ல பட்ச சதுர்த்தியில் சந்திரனை எவரும் பார்த்தல் கூடாது. அவ்வாறு பார்ப்பவர்கள் துன்பம் அடைவார்கள். ஏனைய நாட்களில் முன்போலப் பிரகாசத்துடன் கூடிய அவனுருவை யாவரும் காணலாம்’ என்று மாற்றுரைத்தார். அன்றைய தினமே விநாயகர் சதுர்த்தி என்று அழைக்கப்படுகிறது.

தட்சனின் மகளாக பிறந்த பார்வதி தேவி, அப்போது தாட்சாயிணி என்ற பெயரில் சிவனை அடைந்தார். ஒரு முறை தட்சன் நடத்திய யாகத்திற்கு சிவபெருமானை முறையாக அழைக்காததால், பார்வதி தேவி நியாயம் கேட்க சென்றபோது தட்சன் அவரை அவமதித்து அனுப்பி விட்டான். இதனால் ஆத்திரம் கொண்ட சிவபெருமான் வீரபத்திரரை அனுப்பி தட்சனின் யாகத்தை அழித்தார்.

அதையடுத்து தட்சனின் மகளாக இருக்க விருப்பம் இல்லாத தாட்சாயிணி, இமயனுக்கு மகளாக பிறந்தார். அப்போது சிவபெருமானை அடைவதற்காக ஆவணி மாத சதுர்த்தியில் தான் தவம் மேற்கொண்டார். அதன் பலனாக சிவபெருமானையே கணவராக அடைந்தார் என்ற சிறப்பும் விநாயகர் சதுர்த்தி தினத்திற்கு உண்டு.

விரத முறை

விநாயகர் சதுர்த்தி தினத்திற்கு முதல் நாள் வீட்டை சுத்தம் செய்ய வேண்டும். விநாயகர் சதுர்த்தி அன்று காலை எழுந்து நீராடி, களி மண் அல்லது சந்தனத்தில் பிள்ளையாரை செய்து வைத்து அன்றைய தினம் முழுவதும் உபவாசம் இருக்க வேண்டும். அப்போது விநாயகர் கவசம், மற்றும் விநாயகரைப் பற்றிய துதிப் பாடல்களை பாடி வழிபட வேண்டும். மறுநாள் காலை விநாயகருக்கு மோதகம், கொழுக்கட்டை, பாயசம், சர்க்கரைப் பொங்கல், அவல், பொரி, பழ வகைகளை நிவேதனமாக வைத்து தீபாராதனை காட்டி வழிபட வேண்டும்.

அதன்பிறகு விரதம் இருப்பவர், முதல் நாளில் இருந்து செய்து வழிபட்ட பிள்ளையாரை ஆற்றிலோ, கடலிலோ கொண்டு போய் விட்டு விட்டு வந்த பின் உணவருந்த வேண்டும். அல்லது வேறு ஒருவர் மூலமாகவும், விநாயகரை ஆற்றிலோ, கடலிலோ கரைக்கக் கூறி விட்டு விரதம் இருப்பவர் விரதத்தை பூர்த்தி செய்து கொள்ளலாம்.இந்த விரதத்தை மேற்கொள்வதால், புத்திர பாக்கியம், செல்வம் ஆகிய பலன்கள் கிடைக்கும்.