யாழிலிருந்து கொழும்பு சென்ற தனியார் பஸ் விபத்து : ஒருவர் பலி- 16 பேர் படுகாயம்!!

1060

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு சென்ற தனியார் பேருந்து வேக கட்டுப்பாட்டை இழந்து புத்தூர்- ஆவரங்கால் பகுதியில் தடண்புரண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 16 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

நேற்றிரவு இடம்பெற்ற இந்த விபத்து சம்பவம், யாழ்.குடாநாட்டில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. யாழ்.நகரப்பகுதியிலிருந்து கொழும்பு செல்லும் 40 பயணிகளுடன் குறித்த பஸ் பயணமாகியுள்ளது.

இந்நிலையில் வடக்கிலிருந்து கொழும்பு செல்லும் பேருந்துகளுக்கான வழித்தட அனுமதி பத்திரம் தொடர்பில் அரசாங்கம் இறுக்கமான நடைமுறைகளை கொண்டுவந்துள்ளமையினால், குறித்த பேருந்து ஏ9 வீதியூடாக பயணிக்காமல் புத்தூர் வழியாக பயணித்துள்ளது.

இந்நிலையில் பருத்தித்துறை வீதியையும், ஏ9 வீதியையும் இணைக்கும் புத்தூர் ஆவரங்கால் வீதியில் உள்ள வண்ணத்திப் பாலத்திற்கு அருகில் குறித்த பேருந்து மிகை வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் வீதியை விட்டு இறங்கி தடம்புரண்டுள்ளது. இதில் கட்டுடை மானிப்பாயை சேர்ந்த என்.சதீசன் (24) என்ற இளைஞர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார்.

மேலும் குறித்த விபத்துச் சம்பவத்தில் 16 பயணிகள் படுகாயமடைந்துள்ளதுடன், மூவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளதுடன், மற்ற பயணிகள் யாழ்,போதனா வைத்தியசாலையின் விடுதியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவத்தையடுத்து விபத்து நடத்த இடத்தில் பல ஆயிரக்கணக்கான மக்கள் கூடிவிட்டனர். தங்களுடைய உறவினர்களும் கொழும்பு சென்றிருந்தனர். அவர்களுடைய பேருந்தாக இருக்குமோ என்ற சந்தேகத்தில் பெருமளவான மக்கள் குறித்த இடத்தில் கூடிவிட்டனர்.

சம்பவ இடத்திற்கு வந்த படையினர் மற்றும் மேலதிக பொலிஸார் மக்கள் கலைந்து செல்ல, பணிக்கப்பட்டதன் பின்னரே பேருந்தினுள் இருந்த உயிரிழந்தவரின் சடலம் மீட்கப்பட்டு, யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

1 2 3 4 5