வவுனியா ஓமந்தை மத்திய கல்லூரி மாணவர்கள் அரைமரதன் ஓட்டப் போட்டி சாதனை : தேசிய மட்டத்திற்கும் தெரிவு!!

27

வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான அரைமரதன் ஓட்டப் போட்டியில், வவுனியா ஓமந்தை மத்திய கல்லூரி மாணவர்கள் வெற்றி பெற்று பாடசாலைக்கும் வவுனியா மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

இப்போட்டியில் ஓமந்தை மத்திய கல்லூரியைச் சேர்ந்த மாணவி நா.யதுர்ஷிகா மிகச்சிறந்த திறமையை வெளிப்படுத்தி, மாகாண மட்டத்தில் 10 ஆம் இடத்தை பெற்றுள்ளார் . இதன் மூலம் அவர் அடுத்து நடைபெறவுள்ள தேசிய மட்டப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

அதேபோல், இதே போட்டியில் பங்குபற்றிய ஓமந்தை மத்திய கல்லூரியின் மற்றுமொரு வீரரான மாணவன் ச.ததுசாந் போட்டிக்கு மத்தியில் மாகாண மட்டத்தில் 12 ஆம் இடத்தை பெற்றுக்கொண்டு தனது திறமையை நிரூபித்துள்ளார்.

மாணவர்களின் இந்த மாகாண மட்ட சாதனைக்கு பின்னால், அவர்களை நெறிப்படுத்தி திறம்பட பயிற்சி அளித்த விளையாட்டு பயிற்றுவிப்பாளர் த.சகிலன் அவர்களின் அயராத உழைப்பும் வழிகாட்டலும் முதன்மைக் காரணியாக அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தேசிய மட்டத்திற்கு தெரிவாகியுள்ள மாணவி நா.யதுர்ஷிகாவிற்கும், மாகாண மட்டத்தில் சிறந்த இடத்தை பிடித்த மாணவன் ச.ததுசாந்திற்கும், இவர்களை வழிநடத்திய விளையாட்டு பயிற்றுவிப்பாளர் த.சகிலன் மற்றும் அதிபர், ஆசிரியர்கள், பொதுமக்கள் என பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.