இலங்கையில் அனைத்து துறையினரும் மீண்டும் வீட்டிலிருந்து பணியாற்றும் நடைமுறை : அரசாங்க தரப்பிலிருந்து வெளியான தகவல்!!

108

இலங்கையில் வீட்டில் இருந்து வேலை செய்யும் நடைமுறை மீண்டும் நடைமுறைப்படுத்தப்படலாம் என வெளியாகும் தகவல்கள் குறித்து இதுவரை இறுதி முடிவுகள் எடுக்கப்படவில்லை என தொழில் அமைச்சின் செயலாளர் எஸ்.எம்.பியதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவும் எரிபொருள் மற்றும் ஆற்றல் நுகர்வைக் கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் மீண்டும் வீட்டிலிருந்து வேலை செய்யும் முறையை அறிமுகப்படுத்தவுள்ளதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன.

இருப்பினும், தற்போதைய சூழ்நிலையில் வீட்டிலிருந்து வேலை செய்யும் நடைமுறையை மீண்டும் கொண்டு வருவது குறித்து இதுவரை இறுதி முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை என அமைச்சின் செயலாளர் பியதிஸ்ஸ தெளிவுபடுத்தியுள்ளார்.

இந்த வாரம் (மே 26) முதல் வீட்டிலிருந்து வேலை செய்யும் அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் பரவிய பின்னணியிலேயே அமைச்சின் செயலாளர் இவ்வாறு ஆங்கில ஊடகமொன்றிற்கு விளக்கமளித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி அத்தகைய உத்தியோகபூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியிடப்படவில்லை என தொழில் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இருப்பினும், இலங்கையில் நான்கு நாள் வேலை வார முறைமையை அறிமுகப்படுத்துமாறு பல்வேறு தரப்பினரிடமிருந்தும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய தொழில் ஆலோசனை சபைக்குக் கிடைத்துள்ள இந்த கோரிக்கைகள் குறித்து இதுவரை தீர்மானமும் எடுக்கப்படவில்லையென தொழில் அமைச்சின் செயலாளர் எஸ்.எம்.பியதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

எனவே நிறுவனங்களின் தன்மைக்கு ஏற்ப ஆராய்ந்து அடுத்தகட்ட நடவடிக்கைகளைத் தீர்மானிக்குமாறு தொழில் திணைக்களத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.