வவுனியாவில் வட மாகாணத்தில் முதன்முறையாக ‘சிசு செரிய’ பேரூந்து சேவை ஆரம்பம்!!

198

வவுனியாவில் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் உயர்கல்வி கற்கும் மாணவர்களின் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில், தேசிய ரீதியில் புகழ்பெற்ற ‘சிசு செரிய’ (Sisu Seriya) பஸ் சேவை வட மாகாணத்தில் முதன்முறையாக இன்று (15.06.2026) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தலைமையில், வவுனியா பயணிகள் போக்குவரத்து முனையத்தில் இந்த அங்குரார்ப்பண நிகழ்வு நடைபெற்றது.

கடந்த 2005ஆம் ஆண்டு ‘சிசு செரிய’ பேரூந்து சேவை இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட போதிலும், இதுவரை வட மாகாணத்தைச் சேர்ந்த வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களின் மாணவ, மாணவிகளுக்கு இச்சேவை கிடைக்கப் பெற்றிருக்கவில்லை.

இதுவரை இம்மாணவர்கள் இலங்கை போக்குவரத்துச் சபையின் (SLTB) சாதாரண பேரூந்துகள் ஊடாக, பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தியே தமது பயணங்களை மேற்கொண்டு வந்தனர்.

தற்போது கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு, போக்குவரத்து அமைச்சுடன் இணைந்து மேற்கொண்டுள்ள விசேட ஏற்பாட்டின்படி, முதற்கட்டமாக வட மாகாணத்திற்குள் 20 ‘சிசு செரிய’ பேருந்துகளை இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன் தொடக்கமாக, வவுனியா மாவட்ட பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பயன்பாட்டிற்காக இரண்டு புதிய ‘சிசு செரிய’ பேரூந்துகள் இன்று மாணவர்களிடம் கையளிக்கப்பட்டன.

இச்சேவையைப் பயன்படுத்தும் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களிடமிருந்து சாதாரண போக்குவரத்துப் கட்டணத்தில் பாதி (அரைக்கட்டணம்) மாத்திரமே அறவிடப்படும் என்பதுடன், எஞ்சிய பாதியைக் கட்டணத்தை அரசாங்கமே ஏற்றுக்கொள்ளும்.

நிகழ்வில் உரையாற்றிய பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, நாடளாவிய ரீதியில் அனைத்துப் பகுதிகளிலும் பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து வசதிக்காக 200-க்கும் மேற்பட்ட புதிய பேரூந்துகளை ‘சிசு செரிய’ சேவையில் இணைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். இத்திட்டத்திற்காக அரசாங்கத்தினால் ஒரு பில்லியன் ரூபாவிற்கு அண்மித்த தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் வன்னி மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.திலகநாதன், எம்.ஜெகதீஸ்வரன், வட மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் எஸ்.விமலேஸ்வரன் உள்ளிட்ட அதிகாரிகள், திணைக்களத் தலைவர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.