டிக்டொக் நேரலையில் முத்தமிட்ட இளம் ஜோடிக்கு பிரம்படி!!

21

இந்தோனேசியாவில் டிக்டொக் நேரலையில் முத்தமிட்ட இளம் ஜோடிக்கு பகிரங்கமாகப் பிரம்படித் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் கடுமையான இஸ்லாமிய ஷரியா சட்டத்தை அமுல்படுத்தும் அச்சே மாகாணத்தில், இந்த தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

நீதிமன்றத் தீர்ப்பின்படி, திருமணத்திற்குப் புறம்பாக முத்தமிட்ட குற்றத்திற்காக இருவருக்கும் தலா 25 பிரம்படிகள் விதிக்கப்பட்டிருந்தன.

எனினும், அவர்கள் ஏற்கனவே நான்கு மாதங்கள் சிறைத்தண்டனைக்கு உட்பட்டிருந்தமையால், தலா 4 பிரம்படிகள் குறைக்கப்பட்டு, இறுதித் தீர்ப்பாக இருவருக்கும் தலா 21 பிரம்படிகள் வீதம் வழங்கப்பட்டன.

முன்னதாக, 22 வயதுடைய இளைஞர் ஒருவரும், 25 வயதுடைய இளம்பெண் ஒருவரும் கடந்த பெப்ரவரி 27 ஆம் திகதியன்று சிற்றுந்து ஒன்றிற்குள் அமர்ந்து முத்தமிட்டபடி டிக்டொக்கில் நேரலை செய்துள்ளனர்.

இந்த காணொளியை ஆதாரமாகக் கொண்டு, கடந்த ஏப்ரல் மாதத்தில் இளம் ஜோடி இருவரையும் காவல்துறையினர் கைது செய்திருந்தனர்.