மோட்டார் சைக்கிள் மீது தென்னை மரம் விழுந்து பரிதாபமாக பலியான இளைஞன்!!

32

மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம் மிரா பயந்தர் பகுதியில் கடந்த சில நாட்களாகக் கடுமையான பருவமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதன் காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை நீடித்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மிரா பயந்தர் மாநகராட்சியின் முன்னாள் துணை மேயர் அசோக் பாட்டிலின் 35 வயது மகனான ராகுல் அசோக் பாட்டில் என்பவர், கடந்த புதன்கிழமை மாலை தனது மோட்டார் சைக்கிளில் சதானந்த் நகர் பகுதி வழியாகச் சென்று கொண்டிருந்தார்.

அவர் சாலையில் சென்று கொண்டிருந்த அந்தச் சமயத்தில், பலத்த காற்று மற்றும் கனமழையின் கோரத் தாண்டவத்தால் அங்கிருந்த பெரிய தென்னை மரம் ஒன்று திடீரென வேரோடு சாய்ந்தது. கண் இமைக்கும் நேரத்தில் அந்த மரம் ராகுல் அசோக் பாட்டில் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மிக பயங்கரமாக விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் உடல் முழுவதும் பலத்த காயமடைந்த அவர், அக்கம் பக்கத்தினரால் மீட்கப்பட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவசரச் சிகிச்சைக்காக உடனடியாக அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் கடந்த 2 நாட்களாகப் போராடி வந்த ராகுல் அசோக் பாட்டில், சிகிச்சை பலனின்றிப் பரிதாபமாகத் தனது உயிரை இழந்தார்.

இந்தத் துயரச் சம்பவம் அவரது குடும்பத்தினர் மற்றும் முர்தாகான் பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த பருவமழைக் காலத்தில் தானே மாநகரப் பகுதியில் பதிவான முதல் மழைக்கால மரணம் இது என்று மாவட்ட நிர்வாக அதிகாரிகள் முறைப்படி தெரிவித்துள்ளனர்.