வவுனியாவில் கோர விபத்து : ஹயஸ் மற்றும் கார் மோதி பாதசாரி பரிதாபமாக உயிரிழப்பு!!

739

வவுனியா, புளியங்குளம் பகுதியில் நேற்று (08.07.2026) இடம்பெற்ற வாகன விபத்தில் பாதசாரி ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சம்பவம் குறித்து தெரியவருவதாவது

வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ‘ஹயஸ்’ ரக வாகனம் ஒன்று, அங்கிருந்த பாதசாரி கடவையினூடாக வீதியைக் கடக்க முயன்ற நபர் மீது பலமாக மோதியுள்ளது.

இந்த மோதலின் தாக்கத்தால் குறித்த நபர் தூக்கி எறியப்பட்டு வீதியின் மறுபக்கத்தில் விழுந்துள்ளார். அதேநேரம், யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி எதிர்த்திசையில் வந்துகொண்டிருந்த கார் ஒன்று, வீதியில் விழுந்த நபர் மீது எதிர்பாராதவிதமாக ஏறியுள்ளது. காரின் சக்கரங்கள் அவர் மீது ஏறி இறங்கியதில் அவர் கடுமையான காயங்களுக்குள்ளானார்.

இந்த விபத்தில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரே சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பான தகவலறிந்த புளியங்குளம் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சடலத்தை மீட்டதுடன், விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

பாதசாரி கடவையில் இடம்பெற்ற இந்த கொடூர விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.