வவுனியாவில் சிறுபோக நெல் கொள்முதல் ஆரம்பம்!!

54

வவுனியா மாவட்டத்தில் சிறுபோக நெல் அறுவடையை முன்னிட்டு, விவசாயிகளிடமிருந்து நெல்லினைக் கொள்முதல் செய்யும் நடவடிக்கைகள் நேற்று (16.07.2026) முதல் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்டச் செயலாளர் பி.ஏ.சரத்சந்திர தெரிவித்துள்ளார்.

இம்முறை சிறுபோக நெல் அறுவடையை முறையான விலையில் விவசாயிகளிடமிருந்து பெற்றுக்கொள்வதற்காக மாவட்டத்தில் மொத்தம் 6 நெல் களஞ்சியசாலைகள் தயார்ப்படுத்தப்பட்டுள்ளன.

அவற்றில் முதற்கட்டமாக, வவுனியா உணவுக் களஞ்சியம் உட்பட இரண்டு முக்கிய களஞ்சியசாலைகளில் நேற்று முதல் நெல் கொள்முதல் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஏனைய களஞ்சியசாலைகளும் தேவைக்கேற்ப அடுத்தடுத்து திறக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்படவுள்ளன.

அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்ட உத்தரவாத விலையின் அடிப்படையில் நெல் சந்தைப்படுத்தல் சபை (Paddy Marketing Board) இந்த கொள்முதல் நடவடிக்கைகளை நேரடியாக முன்னெடுத்து வருகிறது.

விவசாயிகளின் நலனைக் கருத்திற்கொண்டு அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்டுள்ள உத்தரவாத விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் நாடு நெல் (1 கிலோகிராம்) ரூ. 120.00 , சம்பா நெல் (1 கிலோகிராம்) ரூ. 130.00 , கீரி சம்பா நெல் (1 கிலோகிராம்): ரூ. 140.00 ஆக அரசாங்கத்தின் உத்தரவாத விலை வெளியிடப்பட்டுள்ளது

நெல் கொள்முதல் தொடர்பான மேலதிக விபரங்கள் மற்றும் வழிகாட்டல்களுக்கு அந்தந்தப் பகுதி விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர்கள் அல்லது மாவட்ட செயலகத்தின் விவசாயப் பிரிவைத் தொடர்புகொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.