ஜோதிடரின் கணிப்பால் வீடியோ வெளியிட்டு இளம் ஆசிரியை எடுத்த விபரீத முடிவு!!

22

உத்தராகாண்ட் மாநிலம் டேராடூன் பகுதியில் இளம் ஆசிரியை ஸ்ருஷ்டி கந்தாரி என்பவர் வசித்து வந்தார். இவருக்குத் திருமணம் முடிந்து 8 மாதங்களே ஆன நிலையில்,இவர் தனது வீட்டில் தற்கொலை செய்து மாண்டுள்ளார்.

தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாகத் தனது கணவர் குடும்பத்தினர் மீது பல கடுமையான குற்றச்சாட்டுகளைச் சுமத்திப் பதிவு செய்த காணொளி ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இந்தக் காணொளி சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அந்தக் காணொளியில் கண்ணீர் மல்கப் பேசியுள்ள ஸ்ருஷ்டி கந்தாரி, திருமணத்திற்குப் பிறகு தனது கணவரின் தந்தைக்குத் திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அதன் பிறகு ஜோதிடர் ஒருவரை அணுகி ஆலோசித்த போது, மருமகள் வீட்டிற்குள் வந்த நேரமே உங்களுக்கான கஷ்டகாலம் தொடங்கியது எனக் கூறியுள்ளார்.

ஜோதிடரின் இந்தக் கூற்றை முழுமையாக நம்பிய கணவர் வீட்டினர், தன்னைத் தொடர்ச்சியாக மனரீதியாகக் கடுமையாகத் துன்புறுத்தி வந்ததாக அவர் அந்தப் பதிவில் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

ஜோதிட நம்பிக்கையின் பெயரால் தனக்கு நேர்ந்த இந்தத் தொடர் கொடுமைகளைத் தாங்க முடியாமலே இந்த முடிவை எடுப்பதாக அவர் உருக்கமாகக் கூறியுள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்துக் தகவல் அறிந்த காவல் துறையினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு வந்து உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள காவல் துறையினர், தற்கொலைக்குக் காரணமான கணவர் குடும்பத்தினர் குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.