
வவுனியா மண்ணில் இதுவரை இல்லாத வகையில், முதன்முறையாக ஒரு பாடசாலை வளாகத்தில் மிக பிரமாண்டமாகவும் கோலாகலமாகவும் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள “சேமமடு முத்தமிழ் விளையாட்டு விழா 2026” எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 2ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வெகுவிமர்சையாக நடைபெறவுள்ளது.

வவுனியா, ஓமந்தை சேமமடு முத்தமிழ் விளையாட்டுக்கழகத்தின் பிரத்யேக ஏற்பாட்டில், சேமமடு பழையமாணவர்கள் சங்கம் மற்றும் ஓமந்தை பழைய மாணவர்கள் சங்கம் (UK) ஆகியவற்றின் நிதி அனுசரணையுடன் இவ்விளையாட்டுத் திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் மாதம் 2ஆம் திகதி அன்று காலை 6:00 மணி முதல் மாலை 7:00 மணி வரை நாள் முழுதும் திருவிழாப்போல விழாக்கோலம் பூணவுள்ளது. இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் விளையாட்டுத் திறன்களை ஊக்குவிப்பதுடன், நமது பாரம்பரியப் பெருமையைப் பறைசாற்றும் வகையில் பல சுவாரசியமான போட்டிகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.

துடுப்பாட்டம் (Cricket), கரப்பந்தாட்டம் (Volleyball), தடையோட்டம், சாக்கோட்டம், குண்டெறிதல், அஞ்சல் ஓட்டம் மற்றும் மரதன் ஓட்டம் , கிளித்தட்டு, கயிறு இழுத்தல், முட்டி உடைத்தல், சறுக்கு மரம் ஏறுதல், தலையணைச் சண்டை, கிடுகு பின்னுதல், தேங்காய் துருவுதல்,
வினோத உடைப் போட்டி மற்றும் மெதுவாக சைக்கிள் ஓடுதல், பாடசாலை மதில் சுவரில் வண்ணமிகு ஓவியம் வரைதல், மேடை கலை நிகழ்ச்சிகள் மற்றும் சிறுவர்களுக்கான சிறப்பு விளையாட்டுகள் என பல வகையான விளையாட்டு நிகழ்வுகளுடன்,

மேலும், விழாவின் சிறப்பு அம்சமாக நடைபெறும் அதிர்ஷ்ட இலாபச் சீட்டிழுப்பில் (Raffle Draw) வெற்றிபெறுபவர்களுக்கு முதலாம் பரிசாக ரூ. 200,000 ரூபாவும் இரண்டாம் பரிசாக 100,000 ரூபாவும் மூன்றாம் பரிசாக 50,000 ரூபாவும் 10பேருக்கு ஆறுதல் பரிசுகளும் வழங்கப்படவுள்ளது
இந்நிகழ்வில் கலந்துகொள்ளும் பொதுமக்கள், பார்வையாளர்கள் மற்றும் போட்டியாளர்கள் அனைவருக்கும் அனுமதி முற்றிலும் இலவசமாகும்.
அத்துடன், விழாவிற்கு வருகை தரும் 1500க்கும் மேற்பட்ட நபர்களுக்கு மிகச் சுவையான பிரியாணி விருந்து, காலை உணவுகள் மற்றும் குளிர்பானங்கள் முற்றிலும் இலவசமாக வழங்கி உபசரிக்கப்படவுள்ளமை இவ்விழாவின் மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

வவுனியா மாவட்டத்தில் முதன்முறையாக பாடசாலை ஒன்றில் இவ்வளவு பிரமாண்டமாக நடைபெறும் இந்த முத்தமிழ் விளையாட்டுத் திருவிழாவில் பொதுமக்கள், விளையாட்டு ஆர்வலர்கள், இளைஞர்கள் அனைவரும் குடும்ப சமேதராக திரளாகப் பங்கேற்று விழாவை வெற்றிபெறச் செய்யுமாறு வவுனியா ஓமந்தை சேமமடு முத்தமிழ் விளையாட்டுக்கழகத்தினர் அன்புடன் அழைக்கின்றனர்.





