பகலில் இருளில் மூழ்கிய பல ஐரோப்பிய நாடுகள்!!

104

ஐரோப்பிய கண்டத்தில் பல பகுதிகளில் நேற்று (12) அரிய வகை முழுச் சூரிய கிரகணம் தென்பட்டது. இதன்போது நிலவு சூரியனை முழுமையாக மறைத்ததால், ஐரோப்பிய நாடுகளில் பல பகுதிகள் பகல் வேளையிலேயே இருளில் மூழ்கின. இந்த அரிய வானியல் நிகழ்வைக் காண ஸ்பெயின் உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளில் கோடிக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர்.

கிரீன்லாந்து, ஐஸ்லாந்து மற்றும் வடக்கு ஸ்பெயின் ஆகிய பகுதிகளைக் கடந்து முழுச் சூரிய கிரகணம் தென்பட்டதுடன், ஐரோப்பிய பிரதான நிலப்பரப்பில் 1999ஆம் ஆண்டு ஓகஸ்ட் 11ஆம் திகதிக்குப் பின்னர் தென்பட்ட முதல் முழுச் சூரிய கிரகணம் இதுவாகும்.

சூரியன், நிலவு மற்றும் பூமி ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும்போது, நிலவு சூரியனை மறைப்பதன் காரணமாக சூரிய கிரகணம் ஏற்படுகிறது.

ஸ்பெயினின் பல நகரங்கள் மற்றும் திறந்தவெளி மைதானங்களில் திரண்ட மக்கள், தெளிவான வானிலைக்கு மத்தியில் சில நிமிடங்கள் நீடித்த முழு இருளை வியப்புடன் கண்டுகளித்தனர்.

அதேவேளை, சுவிட்சர்லாந்தின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள சாசரல் மலைப்பகுதி உள்ளிட்ட பல இடங்களிலும் பகுதிச் சூரிய கிரகணம் தென்பட்டது.

பிரித்தானியாவில் சூரியனின் 90 சதவீதத்துக்கும் அதிகமான பகுதியை நிலவு மறைத்த நிலையில், பகுதிச் சூரிய கிரகணம் தெளிவாகக் காட்சியளித்தது. லண்டனில் உள்ள பிரபல பிக் பென் மணிக்கூட்டு கோபுரத்தின் பின்னணியிலும் கிரகணம் காட்சியளித்தது.

மேலும், பர்மிங்ஹாமில் நடைபெற்ற ஐரோப்பிய தடகள சம்பியன்ஷிப் போட்டியின்போதும் ரசிகர்கள் இந்த அரிய வானியல் நிகழ்வை ரசித்ததுடன், ஹங்கேரியின் அகாட் பகுதியில் உள்ள அவதானிப்புக் கோபுரத்திலும் வானியல் ஆர்வலர்கள் கிரகணத்தை பார்வையிட்டுள்ளனர்