
களுத்துறை, புலத்சிங்கல பகுதியில் வீடு ஒன்றின் அருகில் வைத்து இரு இளைஞர்கள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் தொடர்பில் கணவன், மனைவி உள்ளிட்ட மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த 10 ஆம் திகதி இரவு இடம்பெற்ற இத்தாக்குதலில் இரு இளைஞர்களும் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பெண் ஒருவரை இளைஞர்கள் கேலி செய்தமையால் ஏற்பட்ட வாக்குவாதம் வன்முறையாக மாறியதாக தெரிவிக்கப்படுகிறது.
புலத்சிங்ஹல பிரதேசத்தை சேர்ந்த இரண்டு இளைஞர்களே இவ்வாறு படுகாயமடைந்துள்ளனர். சம்பவம் தொடர்பாக 29 வயதுடைய கணவன், மனைவி மற்றும் அவர்களின் 19 வயதுடைய சகோதரன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட தம்பதியினர் பெண் ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி வருகின்றனர்.
கடந்த 10 ஆம் திகதி இரவு பெண் பணியை முடித்துவிட்டு பேருந்தில் இறங்கி கணவருடன் வீடு நோக்கிச் சென்று கொண்டிருந்த போது இளைஞர்கள் கேலி செய்துள்ளனர்.
இதனால் கோபமடைந்த கணவன் அந்த இளைஞர்களைத் எச்சரித்து விட்டு சென்றுள்ளார். குறித்த இளைஞர்கள் அந்த பெண்ணின் வீட்டிற்கு அருகில் சென்றுள்ளனர்.
இதன்போது இரு தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தைத் தொடர்ந்து, தம்பதி இளைஞர்களை நோக்கி பெட்ரோல் போத்தலை வீசியதுடன் தீ வைத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தாக்குதலில் படுகாயமடைந்த இரண்டு இளைஞர்களும் முதலில் ஹொரணை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதுடன், மேலதிக சிகிச்சைக்காக பின்னர் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இச்சம்பவத்தால் ஆத்திரமடைந்த பிரதேசவாசிகள் சந்தேகநபர்களின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தி சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தியுள்ளனர்.





