வவுனியாவில் 16 பவுண் நகையை கொள்ளையடித்த நால்வர் கைது!!

144

வவுனியாவில் வீடொன்றிற்குள் நுழைந்து அங்கு வைக்கப்பட்டிருந்த 16.750 பவுண் நகைகளை திருடிய குற்றச்சாட்டில் நான்கு பேரை கைது செய்துள்ளதாக வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் இன்று(24.08.2026) தெரிவித்துள்ளனர்.

கடந்த 20ஆம் திகதி வவுனியா, தேக்கவத்தை பகுதியில் உள்ள வீடு ஒன்றிற்குள் நுழைந்து சிலர் வீட்டின் அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த சுமார் 16.750 பவுண் தங்க நகைகளை திருடியிருந்தனர். இது தொடர்பாக வவுனியா தலைமை பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு முறைப்பாடு வழங்கப்பட்டிருந்தது.

இதற்கமைய, விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு பேரை கைது செய்துள்ளதுடன், அவர்களிடமிருந்து திருடப்பட்ட14 பவுண் நகைகளையும் கைப்பற்றியுள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர், திருடப்பட்ட வீட்டிற்கு அருகில் வசிப்பர் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. குறித்த நபர், திருடிய ஒரு பகுதி நகைகளை யாழில் அமைந்துள்ள வீட்டின் பின்புறத்தில் புதைத்து வைத்துள்ளார்.

மேலும், ஒரு தொகுதி நகைகள் வவுனியா கடை வீதியில் அமைந்துள்ள பிரபல அடகு நிலையத்தில் அடைவு வைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நகைகளின் பெறுமதி 57 இலட்சத்து 91 ஆயிரம் ரூபாய் என பொலிஸார் தெரிவித்துள்ளதுடன், கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் வவுனியா நீதவான் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்தனர்.